கொரோனாவின் இரண்டாவது அலையை தடுப்பதற்கு ஐரோப்பிய அரசாங்கங்கள் தவறிவிட்டன.மீண்டும் அதே தவறினை இழைத்தால் 2021 இன் ஆரம்பத்தில் கொரோனா வைரசின் மூன்றாவது அலை ஐரோப்பாவை தாக்கலாம் என கொவிட் 19 தொடர்பான உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஐரோப்பிய நாடுகளிற்கான பிரதிநிதி டேவிட் நபாரோ எச்சரித்துள்ளார்.
தற்போது இரண்டாவது அலையை எதிர்கொண்டுள்ளளோம்.ஐரோப்பிய அரசாங்கங்கள் அவசியமான உட்கட்டமைப்பினை கட்டியெழுப்பாவிட்டால் அடுத்த வருட ஆரம்பத்தில் நாங்கள் மூன்றாவது அலையை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்;
தென்கொரியா போன்ற நாடுகளில் தொற்றின் அளவு மிகக்குறைவாக உள்ளது.மக்கள் கொரோனா வைரசிற்கு எதிரான நடவடிக்கைகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டுள்ளனர்.வைரஸ் பரவுவதை கடினமாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.
தென்கொரியா போன்ற நாடுகளில் மக்கள் சமூக விலக்கலை பின்பற்றுகின்றனர்.முகக்கவசங்களை அணிகின்றனர், தாங்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டால் தங்களை தனிமைப்படுத்திக்கொள்கின்றனர். கைகளையும் தரைகளையும் கழுவுகின்றனர்.
ஆபத்தான நிலையில் உள்ள மக்களை பாதுகாப்பதிலும் ஆசிய நாடுகளை சேர்ந்தவர்கள் அக்கறையை வெளிப்படுத்துகின்றனர்.
ஆசிய நாடுகள் அவசரப்பட்டு கட்டுப்பாடுகளை தளர்த்தவில்லை.பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவானதாக காணப்படும் வரை நீங்கள் காத்திருக்கவேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.