அல்கைதா பயங்கரவாத அமைப்பின் தலைவர் அய்மன் அல் ஜவாஹிரி உயிரிழந்துள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜவாஹிரியின் மரணம் குறித்து கடந்த சில தினங்களாக வதந்திகள் பரவிவந்த நிலையிலேயே, பாகிஸ்தான் ஊடகங்கள் மரணச் செய்தியை உறுதிசெய்துள்ளன.
ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்டிருந்த அவர், சுவாசிப்பதில் ஏற்பட்ட சிரமத்தால் இயற்கை மரணமடைந்துள்ளதாக பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஜவாஹிரி இயற்கை மரணம் எய்தினார் என்பதை தாம் உறுதி செய்துள்ளதாக ஆப்கான் எல்லையில் உள்ள பாகிஸ்தான் பாதுகாப்பு உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஒரு மாதத்திற்கு முன்னரே ஜவாஹிரி உயிரிழந்துள்ளதாகவும் பாகிஸ்தான் வட்டார சில செய்திகள் வெளியாகியுள்ளன.
அல்கைதாவுடன் தொடர்புடைய வட்டாரங்களும் இதனை உறுதி செய்துள்ளதாகவும் இறுதி நிகழ்வுகள் ஏற்கனவே முடிந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
“அமெரிக்க 9/11” பயங்கரவாதத் தாக்குதலின் நினைவு தினத்தையொட்டி அல்கைதா சார்பாக இவ்வருடம் வெளியிட்டிருந்த அறிக்கையே அவரது இறுதியான செயற்பாடாகும் எனக் குறிப்பிடப்படுகின்றது.
எகிப்தை சேர்ந்த மருத்துவரான அய்மன் அல் ஜவாஹிரி, ஒசாமா பின் லாடன் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அல்கைதா அமைப்பின் தலைவராகச் செயற்பட்டு வந்துள்ளார்.