October 6, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“அமெரிக்க – இந்திய உறவில் பாதிப்பை ஏற்படுத்த சீனா முயல்கின்றது”: அமெரிக்கா

இந்தியாவை எதிராளியாக கருதும் சீனா, அமெரிக்கா மற்றும் ஏனைய ஜனநாயக நாடுகளுடனான இந்தியாவின் மூலோபாய உறவுகளை கட்டுப்படுத்த முயல்கின்றது என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஆசிய பிராந்தியத்தில் பல நாடுகளின் பாதுகாப்பை, சுயாட்சியை, பொருளாதார நலன்களை சீனா அலட்சியம் செய்கின்றது எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

“சீனா இந்தியாவை தனக்கு போட்டியாக வளர்ந்துவரும் நாடாக கருதுகின்றது. இந்தியாவை தனது அபிலாசைகளிற்கு இடமளிக்கும் வகையில் சீனா தூண்ட முயல்கின்றது. அதேவேளை அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஏனைய ஜனநாயக நாடுகளுடனுமான இந்தியாவின் உறவுகளை கட்டுப்படுத்த சீனா முயல்கின்றது.

சீனாவின் கம்யுனிஸ்ட் கட்சி வல்லரசு போட்டியின் புதிய சகாப்தத்தை உருவாக்கியுள்ளது என்ற உணர்வு அமெரிக்காவிலும் உலக நாடுகள் மத்தியிலும் காணப்படுகின்றது.

தற்போதைய உலக ஒழுங்கில் முன்னுரிமை பெறுவது மாத்திரம் சீன கம்யுனிஸ்ட் கட்சியின் நோக்கமல்ல. மாறாக உலக ஒழுங்கை மாற்றி சீன குடியரசை அதன் மையத்தில் வைத்து தனது சர்வாதிகார மேலாதிக்க அபிலாசைகளை முன்னெடுப்பதே சீனாவின் நோக்கம்.

சீனாவினால் உருவாகியுள்ள இந்த சவால் காரணமாக அமெரிக்கா சர்வதேச அளவில் சுதந்திரத்தை உறுதி செய்யவேண்டும்” என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.