May 13, 2025 2:35:13

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தேசபந்துவுக்கு விளக்க மறியல் – பொலிஸ் அமைச்சர் வெளியிட்ட புதிய தகவல்கள்!

நீதிமன்றத்தில் சரணடைந்த பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் நாளைய தினம் வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டள்ளார்.

இதேவேளை தேசபந்து தென்னகோன் தொடர்பாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (19) பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றினார்.

பல நாட்களாக நாட்டில் தலைமறைவாக இருந்து சிறப்பு கவனத்தை ஈர்த்த தேசபந்து தென்னகோன், மாத்தறை நீதிமன்றத்தில் சரணடைந்ததாக அமைச்சர் தெரிவித்தார்.

நேற்று (18) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தை சேர்ந்த ஒரு குழு ஹோகந்தர பகுதியில் உள்ள தேசபந்து தென்னகோனின் வீட்டை சோதனை செய்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அங்கு 1009 மதுபான போத்தல்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அவற்றில் 795 வெளிநாட்டு மதுபான போத்தல்களும் 214 வைன் போத்தல்களும் அடங்கியுள்ளதாக அமைச்சர் ஆனந்த விஜேபால கூறினார்.

அத்துடன் ​அவரது துப்பாக்கி என்று சந்தேகிக்கப்படும் ஒரு பிஸ்டல் வகை ஆயுதத்தையும், இரண்டு நவீன கையடக்க தொலைபேசிகளையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

இந்த கையடக்க தொலைபேசிகள் மூலம் அதிக அளவிலான தகவல்களை வெளிக்கொணர முடியும் என்றும் அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் இந்த விடயம் குறித்து நீதிமன்றத்திற்கு அறிக்கை அளிக்கப்படவுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் தெரிவித்தார்.