கொரோனா தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸா விடயத்தில், அரசாங்கம் அடிப்படைவாத போக்குடனேயே நடந்துகொள்வதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
கொரோனா மரணங்களின் போது, அந்தந்த தரப்பினரின் விருப்பத்திற்கேற்ப இறுதிச் சடங்குகளை மேற்கொள்ள முடியுமென்று உலக சுகாதார ஸ்தாபனம் பரிந்துரைத்துள்ள போதும், இலங்கையில் முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் அவர்களின் மத உரிமைகளையும் மீறி எரிக்கப்படுவதாக சஜித் பிரேமதாஸ சுட்டிக்காட்டியுள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து உரையாற்றும் போதே, சஜித் பிரேமதாச இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
கொரோனா மரணங்களை எரிக்கும் விடயத்தில் பக்கச்சார்பற்ற தீர்மானம் வழங்கப்பட வேண்டும் என்று அவர் இதன்போது வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனா சூழ்நிலையில் பல்வேறு நாடுகளும் வேறுபாடுகளை மறந்து செயற்படும் போது, இலங்கை அரசாங்கம் கொரோனாவை வைத்து இன, மத மற்றும் கட்சி பேதங்களை ஏற்படுத்தி, முழு நாட்டையும் பிரித்துவிட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
கொரோனா மரணமொன்றின் போது, அந்தந்த தரப்பினரின் விருப்பத்திற்கமைய அடக்கம் செய்யலாம் என்று உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ள நிலையில், உலக சுகாதார அமைப்பின் அனைத்து பரிந்துரைகளையும் பின்பற்றுவதாகக் கூறும் சுகாதார அமைச்சர் ஏன் இதனைப் பின்பற்றுவதில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
கொரோனா விடயத்தில் முஸ்லிம் சமூகம் இலக்கு வைக்கப்பட்டுள்ளதாகவும், நாட்டு முஸ்லிம்களே கொரோனாவை உருவாக்குகின்றார்கள் என்ற கதை பரப்பப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தோரை தகனம் செய்வது இஸ்லாமிய மதத்திற்கமைய பாவகாரியமாகும் என்றும் உயிரிழந்தோரை அடக்கம் செய்யும் உரிமை அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதேநேரம், கொரோனா தொற்றால் உயிரிழப்போரை தகனம் செய்யும் தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்வதற்கு மருத்துவ நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னிஆரச்சி பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றில் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் தகனம் செய்யப்படுவது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கொவிட்- 19 காரணமாக உயிரிழப்போரை தகனம் செய்வதால் முஸ்லிம்கள் மாத்திரமன்றி கிறிஸ்தவர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அடக்கம் செய்வதற்குள்ள உரிமையை வழங்க அரசாங்கம் நடவடிக்கையெடுக்க வேண்டும் என்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன் ஆகியோரும் இன்று பாராளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளனர்.