Photo: Social media
மக்கள் போராட்டங்களை தொடர்ந்து பதவி விலகுவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ள நிலையில், பதில் ஜனாதிபதியாக யாரை நியமிக்கப் போகின்றார்கள் என்ற கேள்விகள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளன.
இந்தப் பதவிக்காக பல்வேறு நபர்களின் பெயர்கள் கூறப்பட்டு வருகின்ற போதும், அது தொடர்பில் இதுவரையில் உறுதியான தீர்மானங்கள் எதுவும் எடுக்கப்படவில்லை.
கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஜனாதிபதியுடன் பிரதமரும் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தான் உடனடியாக பதவி விலக மாட்டேன் என்றும், சர்வகட்சி அரசாங்கத்தை அமைத்த பின்னர் அது தொடர்பில் அறிவிக்கின்றேன் என்றும் கூறியுள்ளார்.
இவ்வாறான நிலைமையில் அரசியலமைப்பின் பிரகாரம் பதில் ஜனாதிபதியாக பிரதமருக்கே பதவி வழங்கப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சித் தரப்பில் வலியுறுத்தப்படுவதாக கூறப்படுகின்றது.
எனினும் பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்க விலக வேண்டும் என்று போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனால் பதில் ஜனாதிபதியாக சபாநாயகரை சில காலத்திற்கு நியமித்து பின்னர் பாராளுமன்றத்தில் இருந்து ஒருவரை தெரிவு செய்வதற்கு கட்சிகள் யோசனைகளை முன்வைத்துள்ளன.
இவ்வாறான நிலைமையில் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவி விலகினால் அந்தப் பதவிக்கு யாரை நியமிப்பது என்று குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன.
ஆனால் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினர் தம்மிக பெரேராவை பிரதமராக நியமித்து பின்னர் அவரை ஜனாதிபதியாக நியமிக்க முயற்சிப்பதாக கூறப்படுகின்றது.
இதேவேளை சர்வ கட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டால் மைத்திரிபால சிறிசேன, சஜித் பிரேமதாச, சம்பிக்க ரணவக்க அல்லது தேசியப் பட்டியல் ஊடாக கருஜயசூரியவை வரச் செய்து அவருக்கே பிரதமர் பதவியை வழங்குவதற்கு கட்சிகள் ஆராய்ந்து வருகின்றன.
இதனால் இன்னும் யார் பதில் ஜனாதிபதி, பிரதமர் என்பது தொடர்பாக அரசியல் கட்சிகளிடையே குழப்ப நிலைமைகள் ஏற்பட்டுள்ளன.