Photo: SocialMedia
பிரதமர் பதவியில் இருந்து விலகிய மகிந்த ராஜபக்ஷ, கொழும்பு அலரிமாளிகையில் இருந்து வெளியேறியுள்ளார்.
இன்று காலை அவர், பலத்த இராணுவப் பாதுகாப்புடன் அங்கிருந்து வெளியேறிச் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை அவருடன் அலரிமாளிகைக்குள் தங்கியிருந்த முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேறியுள்ளனர்.
காலிமுகத்திடலில் ”கோட்டா கோ கம” ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான அரசாங்க தரப்பு ஆதரவாளர்களினால் நடத்தப்பட்ட தாக்குதலை தொடர்ந்து, நாடு முழுவதும் அமைதியின்மை ஏற்பட்டது.
இதன்போது நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட போதும் அதனையும் மீறி சம்பவத்தை கண்டித்து மக்கள் வீதிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், அந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றும் அரச ஆதரவு தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் மீதும் அதேபோன்று சுயாதீன எம்.பிக்கள் சிலரின் வீடுகள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இவ்வேளையில் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, கெஹலிய ரம்புக்வெல்ல, பந்துல குணவர்தன, ரோஹித அபேகுணவர்தன, நிமல் லான்சா, சனத் நிசாந்த, பிரசன்ன ரணதுங்க, அலி சப்ரி ரகீம், கனகஹேரத், அருந்திக பெர்ணான்டோ, காமினி லொகுகே, நாலக கொடஹேவா, விமல் வீரவன்ச, காஞ்சன விஜேசேகர, எஸ்.எம்.சந்திரசேன, சன்ன ஜயசுமன, துமிந்த திஸாநாயக்க ஆகியோரின் வீடுகள் மீது தீ வைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை மகிந்த ராஜபக்ஷவின் தந்தையின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள வீரகெட்டியவில் உள்ள டீ.ஏ.ராஜபக்ஷ தூபி, வீரகெட்டிய இல்லாம், ராஜபக்ஷவின் குருநாகல் வீடு என்பனவும் சேதமாக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இரவு முழுவதும் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மகிந்த ராஜபக்ஷவும் எம்.பிக்கள் குழுவினரும் அலரிமாளிகையில் தங்கியிருந்த நிலையில் அவர்கள் இன்று காலை பாதுகாப்பாக வெளியேறியுள்ளனர்.
இரவு முழுவதும் அலரிமாளிகையை சுற்றி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் இரண்டு தடவைகள் பொலிஸார் அங்கு கண்ணீர் புகைத் தாக்குதலை நடத்தியுள்ளனர். அத்துடன் இரவு அந்தப் பகுதியில் வானை நோக்கி துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டுள்ளது.