January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”தந்தை செல்வா என்ன செய்திருப்பாரோ அதனையே நாம் செய்தோம்”

தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் இடையே பிளவு இருக்க கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் தந்தை செல்வாவின் 124 ஆவது பிறந்தநாள் நிகழ்வின் பின்னர் தமிழரசுக்கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே சுமந்திரன் இவ்வாறு கூறியுள்ளார்.

எமது கட்சியில் இவர்கள் எப்போது போவார்கள் என்று பலருக்கு நீண்ட காலமான எதிர்பார்ப்பு உள்ளது. எனினும் நாங்கள் தமிழ் மக்களை பிரதிநிதிப்படுத்தும் கட்சிகளில் பிளவு இருக்க கூடாது. எல்லோரும் சேர்ந்து இயங்குவது எமது மக்களுக்கு பலமான விடயம் என்ற நிலைப்பாட்டிலேயே இருக்கின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று அரசாங்கத்துடன் தமிழ் தரப்பு பேச்சுவார்த்தை நடத்தும் சூழ்நிலையில் டெலோ மட்டுமல்ல வெளியில் உள்ள கட்சிகளும் இதற்கு இணங்கி ஒன்றாக சேர்ந்து நாங்கள் எங்களுடைய நிலைப்பாட்டை அரசாங்கத்துக்கு முன் வைக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கையாக உள்ளது என்றும் சுமந்திரன் கூறியுள்ளார்.

இதேவேளை எங்களோடு பேச்சுக்கு வரமாட்டோம் என பகிஸ்கரித்த இயக்கத்தின் தலைவர் ஒருவர், சிறிசபாரத்தினமும் பிரபாகரனும் இந்த சந்தர்ப்பத்தில் என்ன செய்திருப்பார்களோ அதனையே தாம் செய்தோம் என்று கூறியுள்ளார். ஆனால் தந்தை செல்வா இந்த சந்தர்ப்பத்தில் என்ன செய்திருப்பாரோ அதனையே நாம் செய்துள்ளோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.