ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மீரிஹானவில் உள்ள வீட்டுக்கு அருகில் இன்று இரவு கூடிய மக்களால் அந்தப் பகுதியில் பதற்றமான நிலைமை உருவாகியுள்ளது.
எரிபொருள் நெருக்கடி மற்றும் மின்வெட்டு உள்ளிட்ட பிரச்சனைகளை அடிப்படையாகக் கொண்டு மீரிஹான பெங்கிரிவத்த சந்தியில் இரவு 8 மணியளவில் ஒன்றுகூடிய நூற்றுக்கணக்கானவர்கள் ஜனாதிபதிக்கு எதிராக போராட்டத்தை நடத்தினர்.
இதன்போது ஜனாதிபதியின் வீட்டுக்கு செல்லும் வீதியின் ஊடாக எவருக்கும் செல்ல முடியாதவாறு பொலிஸார் வீதித்தடைகளை போட்டு மூடினர்.
இதனை தொடர்ந்து பிரதேசவாசிகளுக்கும் பொலிஸாருக்கும் இடையே முறுகல் நிலைமை ஏற்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்ந்தும் அந்தப் பகுதியில் நிற்பதனால் வீதியை திறப்பதற்கு பொலிஸார் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் அங்கு பதற்றமான நிலைமை நீடிக்கின்றது.
தற்போது அந்தப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.