வலுசக்தி, சுற்றுலா, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழிநுட்பம் உள்ளிட்ட பல துறைகளை மேம்படுத்துவதற்கு பிரித்தானியா, தென்கொரியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளன.
இலங்கை வந்துள்ள குறித்த நாடுகளின் பிரதிநிதிகள் இன்று ஜனாதிபதியை சந்தித்த போதே இதனை தெரிவித்துள்ளதாக ஐனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
பிரித்தானிய பாராளுமன்றத்தின் பிரபுக்கள் சபையின் உறுப்பினர் நெஸ்பி பிரபு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்த போது, புதுப்பிக்கத்தக்க வலுசக்தி உற்பத்திக்கு அரசாங்கத்தின் ஆர்வத்தை பாராட்டியுள்ளார்.
சூரிய சக்தி மற்றும் பிற புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மூலங்களை மின் உற்பத்தியில் இணைப்பதற்கு பிரித்தானியாவின் ஒத்துழைப்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தென் கொரியாவில் இலங்கைக்கு அதிக வேலை வாய்ப்புகளை வழங்குவது தொடர்பில், தமது அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக அரச கொள்கை ஒருங்கிணைப்பு அமைச்சர் கோ யூன் – சோல், ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.
தென் கொரிய தொழில் முயற்சியாளர்களை இலங்கையில் முதலீடு செய்வதற்கு ஊக்குவிப்பதாகவும், கொரியாவில் இருந்து இலங்கைக்கு அதிநவீன தொழிநுட்பத்தை அறிமுகப்படுத்தவும் தன்னால் இயன்ற ஒத்துழைப்பை வழங்குதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன். கொரிய தூதுவர் ஜியோன்ங் வூன்ஜின்ங் மற்றும் கொரியாவின் அரசியல் விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் ரியோ டே-யோன்ங் ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.
விசேட சுற்றுலா வலயங்களை அமைப்பதன் மூலம் எகிப்திய சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை இலங்கை ஈர்க்க முடியும் என இலங்கைக்கான எகிப்திய தூதுவர் மகேட் மொஸ்லே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளார்.