July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அனர்த்த நிலைமையை எதிர்கொள்ள மீட்புக் குழுக்கள் தயார் நிலையில்!

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலையால் மாவட்டங்கள் பலவற்றில் அனர்த்த முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய எந்தவொரு அனர்த்த நிலைமையையும் எதிர்கொள்ளும் வகையில் மீட்புக்குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுதத்த  ரணசிங்க தெரிவித்துள்ளார்.

அனர்த்தம் தொடர்பில் விடுக்கப்படும் அறிவிப்புக்கள் குறித்து அவதானமாக செயற்படுமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ள அவர், அனர்த்த நிலைமைகளின் போது மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்க தேவையான அனைத்து முன் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதேவேளை அறிவுறுத்தல்களை உதாசீனம் செய்து மற்றவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் செயற்படுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் குரிப்பிட்டுள்ளார்.

இந்தக் காலப்பகுதியில் காடுகளுக்குள் பயணித்தல், மலையேறுதல், ஆற்றில் குளித்தல், படகு சவாரி போன்ற பொழுது போக்கு நிகழ்வுகளை தவிர்க்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே நாட்டில் வெள்ளம் மற்றும் அனர்த்த நிலைமை  காரணமாக தற்போது 9 இடைத்தங்கல் முகாம்களில் 63 குடும்பங்களைச் சேர்ந்த 251 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்குத் தேவையான அனைத்து நிவாரணங்களும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.