
சிரியாவின் மத்திய டமஸ்கஸ் நகரில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் 14 இராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர்.
இராணுவ பஸ் வண்டி ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த இரண்டு குண்டுகள் வெடித்ததில் இவர்கள் உயிரிழந்துள்ளனர்.
குறித்த பஸ் வண்டி ஜிஸ்ர் அல்-ரயிஸ் எனும் பாலத்தைக் கடந்து செல்லும் போதே, இந்த குண்டுகள் வெடித்துள்ளன.
அதே பஸ் வண்டியில் பொருத்தப்பட்டிருந்த மூன்றாவது வெடிகுண்டு கீழே விழுந்துள்ளதோடு, அதனை இராணுவ பொறியிலாளர்கள் செயலிழக்கச் செய்துள்ளனர்.
குண்டுத் தாக்குதலுக்குப் பதிலளிக்கும் வகையில், சிரிய இராணுவத்தினர் மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலில், ஆயுதக் குழுவைச் சேர்ந்த 10 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
கடந்த ஒரு தசாப்த காலமாக சிரியாவில் உள்நாட்டு யுத்த நிலை தொடர்ந்தாலும், தலைநகரில் இவ்வாறான வெடிப்பு சம்பவங்கள் மிக அரிதாகவே இடம்பெற்றன.
சிரியாவின் உள்நாட்டு யுத்தத்தின் விளைவாக இதுவரை 350,000 பேர் உயிரிழந்துள்ளதுடன் 60 இலட்சம் பேர் வரை அகதிகளாக புலம்பெயர்ந்துள்ளனர்.