July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

16 வயதில் சதமடித்து அயர்லாந்து வீராங்கனை உலக சாதனை

Photo: Twitter/Ireland Cricket

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மிகக் குறைந்த வயதில் சதமடித்த வீராங்கனை என்ற சாதனையை அயர்லாந்து வீராங்கனை அமி ஹன்டர் நிலைநாட்டியுள்ளார்.

சிம்பாப்வே அணிக்கு எதிராக திங்கட்கிழமை நடைபெற்ற மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய அமி, தனது 16 ஆவது பிறந்த தினத்தன்று சதம் அடித்து சாதனை படைத்து பிறந்தநாளை கொண்டாடினார்.

அயர்லாந்து சார்பாக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சதம் குவித்த நான்காவது வீராங்கனை அமி ஆவார். அத்துடன் கடந்த 21 ஆண்டுகளில் அயர்லாந்து மகளிர் சார்பாக குவிக்கப்பட்ட முதலாவது சதமாகவும் இது பதிவானது.

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இதற்கு முன்னர்  மகளிர் பிரிவில் மிகக் குறைந்த வயதில் சதம் அடித்தவராக இந்தியாவின் மிதாலி ராஜ் இடம்பிடித்தார்.

இவர் அயர்லாந்துக்கு எதிராக 1999 இல் 114 ஓட்டங்களைக் குவித்த போது அவரது வயது 16 வயது 205 நாட்களாகும்.

இந்நிலையில் திங்கட்கிழமை நடைபெற்ற போட்டியில் 127 பந்துகளை எதிர்கொண்ட அமி, ஆட்டமிழக்காமல் 121 ஓட்டங்களை எடுத்தார்.

அத்துடன், அவரது சதத்தின் உதவியுடன் அயர்லாந்து மகளிர் அணி, 50 ஓவர்களில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 312 ஓட்டங்களை எடுத்தது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஸிம்பாப்வே 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 227 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து தோல்வியைத் தழுவியது.

ஸ்கொட்லாந்துக்கு எதிராக கடந்த மே மாதம் நடைபெற்ற மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அமி ஹன்டர் தனது 15 ஆவது வயதில் அறிமுகமானார்.