July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அரச ஊழியர்களை பணிக்கு அழைப்பதற்கான சுற்றறிக்கை வெளியானது!

இலங்கையில் இன்று முதல் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டள்ள நிலையில், அரச ஊழியர்களை பணிகளுக்கு அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி அரச நிறுவனங்களின் ஊழியர்களை மீண்டும் பணிக்கு அழைக்கும் போது பின்பற்ற வேண்டிய சுகாதார விதிமுறைகள் தொடர்பான சுற்றறிக்கை பொதுநிர்வாக சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ளது.

போக்குவரத்துக்கான தனிப்பட்ட கொடுப்பனவுகளை பெறும் அரச அதிகாரிகள் கண்டிப்பாக பணிகளுக்கு சமூகமளிக்க வேண்டும் என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் நோய்நிலைமைகளை உடைய ஊழியர்களை பணிக்கு அழைக்கப்படக் கூடாது என கூறப்பட்டுள்ளது.

எனினும் குறித்த தரப்பிரனை வேளைக்கு அழைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் அவர்களுக்கு அதற்கான சிறப்பு ஏற்பாடுகளை செய்து கொடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்தோடு, முறையான சுகாதார விதிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் நிறுவன ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கொவிட் வைரஸால் பாதிக்கப்படாது இருக்கும் வகையில் செயற்பட வேண்டும் என நிறுவனங்களின் தலைவர்களிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமது ஊழியர்களை தேவையான விதிமுறைகளை பின்பற்றி பணிக்கு அழைக்கும் இறுதி முடிவு நிறுவனங்களின் தலைவர்களிடம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அத்தோடு பணிக்கு சமூகம் தராமுடியாதவர்கள் தமது வேலை நாட்களில் தொடர்ந்து ஒன்லைன் முறையில் பணியாற்ற வேண்டும் என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.