April 24, 2025 2:26:09

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வல்வெட்டித்துறை நகர சபையின் தலைவர் பதவி விலகத் தீர்மானம்!

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை நகர சபையின் தலைவர் கோணலிங்கம் கருணானந்தராசா பதவி விலகத் தீர்மானித்துள்ளார்.

தான் பதவி விலகுவது தொடர்பாக தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் உள்ளிட்டோருக்கு அவர்  கடிதம் ஊடாக அறிவித்துள்ளார்.

இதன்படி நகர சபையின் தலைவர் பதவியிலிருந்து ஜுலை 31ஆம் திகதியுடன் விலகுவதாக அவர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ் அரசுக் கட்சி சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கோணலிங்கம் கருணானந்த ராசா, நகர சபைத் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.

இந்த நிலையில் தமிழ்த் தேசியக் கட்சியை எம்.கே. சிவாஜிலிங்கம் உள்ளிட்டோர் ஆரம்பித்த நிலையில் அவர்களுடன் இணைந்து செயற்படுவதால் தமிழ் அரசுக் கட்சி அவரை வல்வெட்டித்துறை நகர சபையின் தலைவர் பதவியிலிருந்து நீக்க முயற்சித்தது. எனினும் அது பின்னர் கைவிடப்பட்டது.

இந்நிலையில் தொடர்ந்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நகர சபைத் தலைவராகத் தொடர தான் விரும்பாத காரணத்தினால் பதவி விலகு முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.