July 2, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை பார்த்து கையசைத்துச் சென்ற ஜனாதிபதி

கட்டாயத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள அகில இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட குழுவினரை விடுவிக்குமாறு கோரி ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தினால் இன்று கொழும்பில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது.

சுமார் 17 தொழிற்சங்க ஒன்றியங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்தே இந்த எதிர்ப்பு ஆர்பாட்டத்தை முன்னெடுத்திருந்தன.

இதன்போது ஆர்பாட்டகாரர்கள்,தனிமைப்படுத்தல் கைதில் உள்ள தொழிற்சங்க தலைவர்களை உடனடியாக விடுவியுங்கள், தனிமைப்படுத்தலை மையமாககொண்டு மேற்கொள்ளப்படும் அச்சுறுத்தலை உடனடியாக நிறுத்துங்கள் என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறும் கோசங்களை எழுப்பியும் தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.

இதன்போது ஜனாதிபதி செயலகத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதுடன், ஆர்பாட்டக்காரர்கள் உள்ளே செல்லாவாறு ஜனாதிபதிசெயலகத்திற்கு முன்பாக தடுத்து நிறுத்தப்பட்டிருந்தனர்.

இவ்வேளையில் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட தரப்பினரை தனிமைப்படுத்திலிலிருந்து விடுவிக்குமாறு தொழிற்சங்க உறுப்பினர்களின் ஒன்றிணைந்து கையொப்பமிடப்பட்ட மகஜரொன்று ஜனாதிபதி செயலாளரிடம் கையளிக்கப்பட்டது.

இந்த ஆர்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் காரில் சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை பார்த்து கையசைத்தவாறு சென்றார்.