
இலங்கையில் இன்று (திங்கட்கிழமை) மேலும் 2,456 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து நாட்டில் பதிவான தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 145, 202 ஆக அதிகரித்துள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான 24,611 பேர் தற்போது நாடு முழுவதும் உள்ள கொரோனா சிகிச்சை மையங்கள் மற்றும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 1307 பேர் குணமடைந்துள்ளதையடுத்து நாட்டில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 119,629 ஆக அதிகரித்துள்ளது.
பொகவந்தலாவை பகுதியில் கொரோனா தொற்று காரணமாக கணவன் மனைவி இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர்.
கடந்த 13 ஆம் திகதி பொகவந்தலாவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ள அதேவேளை அவரது கணவர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு தொற்றுநோயால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு இலங்கையில் இதுவரை 962 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.
இதனிடையே முல்லைத்தீவு மாவட்டத்தின் மூன்று பொலிஸ் பிரிவுகளை இன்று (திங்கட்கிழமை) இரவு 11 மணி முதல் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு மற்றும் முள்ளியவளை ஆகிய பொலிஸ் பிரிவுகளே இவ்வாறு தனிமைப்படுத்தப்படவுள்ளன.