July 2, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஈஸ்டர் தாக்குதல்: முன்னாள் ஜனாதிபதி உள்ளிட்டோருக்கு எதிரான மனுக்களை மார்ச்சில் விசாரிக்க தீர்மானம்

இலங்கையில் 2019 ஏப்ரல் 21 இடம்பெற்ற பயங்கரவாத குண்டு தாக்குதல்களை தடுக்கத் தவறியதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுக்களை எதிர்வரும் மார்ச் மாதத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

மார்ச் 8, 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் ஏழு பேர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் அந்த மனுக்களை விசாரணைக்கு உட்படுத்த இன்றைய தினத்தில்  தீர்மானிக்கப்பட்டுள்ளது.

2019 ஈஸ்டர் தினத்தன்று கொழும்பு, நீர்கொழுப்பு மட்டக்களப்பு ஆகிய இடங்களில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட பயங்காரவாத தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் 268 பேர் கொல்லப்பட்டதுடன் 500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர்.

இந்த தாக்குதல்கள் தொடர்பான புலனாய்வு தகவல்கள் முன்கூட்டியே வெளியாகியிருந்த போதும், அதனை தடுக்கத் தவறியுள்ளதாகவும், இதனூடாக மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து பல்வேறு தரப்பினரால் உயர்நீதிமன்றத்தில் 12 அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

அந்த தாக்குதல் சம்பவங்களுக்கு அப்போதைய பாதுகாப்பு அமைச்சரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் பொறுப்புக் கூற வேண்டுமெனவும், இதனால் இவர்கள் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் மனுதாரர்கள் நீதிமன்றத்திடம் கோரியுள்ளனர்.

குறித்த மனுக்கள் இன்று பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, புவனேக அலுவிகாரே, சிசிர டி ஆப்ரூ, பிரியந்த ஜயவர்தன, எல்.டி.வீ.தெஹிதெனிய, மூர்து பெர்ணாண்டோ மற்றும் பிரிதி பத்மன் சுரசேன ஆகிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் ஆராயப்பட்ட போது, அவற்றை மார்ச் மாதத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.