
File Photo: Facebook/ Srilanka Red Cross
இலங்கையில் இன்றைய தினத்தில் 636 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 42,699 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை கொரோனா தொற்றுக்கு உள்ளானோரில் 698 பேர் தொற்றில் இருந்து பூரண குணமடைந்து இன்றைய தினத்தில் மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதன்படி இலங்கையில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 34.623ஆக உயர்வடைந்துள்ளதாக கொவிட் தடுப்புக்கான செயலணி தெரிவித்துள்ளது.
இந்த எண்ணிக்கைகளுக்கமை நாட்டில் இதுவரையில் அடையாளம் காணப்பட்டுள்ள மொத்த கொரோனா தொற்றாளர்களில் 82.3 வீதமானவர்கள் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளதாக கொவிட் தடுப்பு மத்திய நிலையத்தின் புள்ளி விபர அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் தற்போது வைத்தியசாலைகளில் 17.2 வீதமானவர்களே சிகிச்சைப் பெற்று வருவதாகவும், தொற்றால் 0.5 வீதமான உயிரிழப்புகளே பதிவாகியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 4 மரணங்கள் பதிவு
கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய கொரோனாவால் இலங்கையில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 199 ஆக உயர்வடைந்துள்ளது.
மேல் மாகாணத்தில் கொரோனா தொற்றியோர் எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்தது
இலங்கையில் இரண்டாவது கொரோனா அலை ஆரம்பித்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் 30,431 தொற்றாளர்கள் மேல் மாகாணத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களில் கொழும்பு மாவட்டத்தில் 17,977 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 9,095 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 3,359 பேரும் உள்ளடங்குவதாக கொவிட் தடுப்பு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
கொஸ்கம பிரதேசம் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு
கடந்த வாரத்தில் தனிமைப்படுத்தப்பட்ட கொழும்பு மாவட்டத்தின் கொஸ்கம பிரதேசம் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கொவிட் தடுப்பு செயலணியினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
மருதனார்மடம் கொத்தணியில் மேலும் 12 பேருக்கு தொற்று
யாழ்ப்பாணம் மருதனார்மடம் கொரோனா கொத்தணியில் மேலும் 12 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனையில் அவர்களுக்கு தொற்று உறுதியானதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் மருதனார்மடம் கொரோனா கொத்தணியில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர் எண்ணிக்கை 130 ஆக உயர்வடைந்துள்ளது.
மட்டக்களப்பு, காத்தான்குடி நகரங்களில் 63 பேருக்கு கொரோனா
மட்டக்களப்பு நகர் பஸார் வீதி மற்றும் காத்தான்குடி நகர் பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் அங்கு கடமையாற்றும் ஊழியர்கள் 1,214 பேருக்கு இன்று சுகாதார அதிகாரிகள் பீசீஆர் பரிசோதனை மேற்கொண்டனர்.
அந்த பரிசோதனைகளில் 63 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.