November 21, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”ஒழுங்குவிதிகளை முறையாக பின்பற்றாவிட்டால் தனிமைப்படுத்தல் தொடரும்” : பொலிஸ் பேச்சாளர்

கொரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவதற்காக விதிக்கப்பட்டுள்ள சுகாதார ஒழுங்குவிதிகளை முறையாக பின்பற்றாவிட்டால் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் தொடர்ந்தும் தனிமைப்படும் நிலைமை ஏற்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

தற்போது கொழும்பு மாவட்டத்தில் 9 பொலிஸ் பிரிவுகளிலும் மற்றும் வெளி மாவட்டங்களில் 32 கிராம சேவகர் பிரிவுகளிலும் தனிமைப்படுத்தல் நடைமுறையில் உள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்தப் பிரதேசங்களில் இருந்து  எவரும் வெளியேறவோ அல்லது அந்த பகுதிக்குள் உள் நுழையவோ கூடாது. அதேபோன்று வீடுகளில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்களும் வீடுகளை விட்டு வெளியேறக் கூடாது.

அந்தவகையில்,  தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிச் செயற்படுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி தனிமைப்படுத்தல் மற்றும் சுகாதார விதிமுறைகளை உரியமுறையில் பின்பற்றினால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் விரைவில் அதிலிருந்து இருந்து விடுவிக்கப்படும் எனவும், அவ்வாறு இல்லாவிடில் குறித்த பகுதிகளில் தனிமைப்படுத்தல் தொடர்ந்தும் நீடிக்கப்படுமெனவும்  பொலிஸ் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், பீசீஆர் பரிசோதனைக்காக மாதிரிகளை வழங்குமாறு கேட்கப்பட்டால் அதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும், சுகாதார விதிமுறைகளுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டாம் என பொதுமக்களை கேட்டுகொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.