
File Photo
கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 220 பேர் இன்றைய தினத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி இலங்கையில் கொரோன தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 19,061 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை கொரோனா தொற்றுக்கு உள்ளான 368 பேர் இன்று குணமடைந்துள்ள நிலையில் இதுவரையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 13,271 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது வைத்தியசாலைகளில் 5717 பேரே சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மலையகத்தில் கொரோனா
தலவாக்கலை, சென் கிளாயர் தோட்டத்தில் 22 வயதுடைய யுவதியொருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த யுவதி தனது கணவருடன் கடந்த 16 ஆம் திகதி கொழும்பு – தெமட்டகொடையிலிருந்து சென் கிளாயர் பிரிவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்பின்னர் குறித்த யுவதி பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் அவருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து கணவர் உட்பட அவருடன் பழகியவர்கள் சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ள யுவதி கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இதேவேளை, கினிகத்தேன பிளக்வோட்டர் பகுதியிலும் 19 வயது யுவதியொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கொழும்பில் வேலை செய்த நிலையில் கடந்த 10 ஆம் திகதியே அவர் ஊர் திரும்பியுள்ளார். பிசிஆர் பரிசோதனையில் அவருக்கும் கொரோனான வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அத்துடன், மஸ்கெலியா காட்மோர் தோட்டத்தில் பிரொக்மோர் பிரிவில் மேலும் இரு கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் பி.ஏ. பாஸ்கரன் தெரிவித்தார்.
வெள்ளவத்தை, தெஹிவளை ஆகிய பகுதிகளில் கட்டட நிர்மாணப்பணி உதவியாளர்களாக பணியாற்றிய 35 மற்றும் 19 வயது இளைஞர்கள் இருவர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 13 ஆம் திகதி பிரொக்மோர் பகுதியிலுள்ள தமது வீடுகளுக்கு வந்துள்ளனர்.
இவர்கள் இருவரும் கடந்த 17 ஆம் திகதி பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், பரிசோதனைகளில் அவர்களுக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இருவரும் ஹம்பாந்தோட்டையிலுள்ள கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நேற்று அழைத்துசெல்லப்பட்டனர்.
மேலும் 66 பேர் இன்று நாடு திரும்பினர்.
வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 66 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.
கட்டார், அவுஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளில் இருந்து இவர்கள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று வந்தடைந்தனர்.
நாட்டை வந்தடைந்த அவர்களுக்கு விமான நிலையத்தில் பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணிநேரத்தில் 46 பேர் கைது
கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் 46 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளிகளை பேணாமை ஆகிய குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இதற்கமைய தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் கடந்த 30 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் 358 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதிப்பொலிஸ் மா அதிபர் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் ட்ரோன் கமெராக்கள் மூலம் கண்காணிக்கும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டினார்.
இதன்படி இந்த நடவடிக்கையூடாக இதுவரை 117 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்பில் மேலும் ஒருவருக்கு கொரோனா
மட்டக்களப்பு நகரில் நேற்று ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அ.லதாகரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு, ஞானசூரியம் சதுக்கத்தை சேர்ந்த 74 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு இனங்காணப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.
கடந்த 9ஆம் திகதி கொழும்பில் இருந்து வந்து சுயதனிமைப்படுத்தலில் இருந்தவரே இவ்வாறு கொரோனா தொற்றாளராக அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.
இதனையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 83ஆக அதிகரித்துள்ளதுடன் கிழக்கு மாகாணத்தில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 128 ஆக உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.