எல்.பி.எல் இருபது20 கிரிக்கெட் தொடரில் கொழும்பு கிங்ஸ் அணியின் பிரதம பயிற்றுவிப்பாளராக தென் ஆபிரிக்க அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹேர்ஷல் கிப்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு கிங்ஸ் அணியின் பிரதம பயிற்றுவிப்பாளராக இருந்த கபீர் அலி, கொரோனா தொற்று ஏற்பட்டதன் காரணமாக விலகிக்கொண்டதைத் தொடர்ந்து ஹேர்ஷல் கிப்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஹேர்ஷல் கிப்ஸ் எல்.பி.எல் போட்டி வர்ணனையாளராக பங்கேற்பதற்கே ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அத்தோடு, கொழும்பு கிங்ஸ் அணியின் துணைப் பயிற்றுவிப்பாளராக இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் செயற்படவுள்ளார்.
இதேவேளை, கோல் கிளேடியேட்டர்ஸ் அணிக்காக விளையாட இருந்த நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க, அதிலிருந்து விலகிக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
லசித் மாலிங்க எல்.பி.எல் தொடரில் விளையாடுவது குறித்து உறுதியாக எதனையும் தெரிவிக்கவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொழும்பு கிங்ஸ், தம்புள்ள ஹவுக்ஸ், கோல் கிளேடியேட்டர்ஸ், ஜெப்னா ஸ்டேலியோன்ஸ், கண்டி டஸ்கர்ஸ் ஆகிய ஐந்து அணிகள் பங்கேற்கும் எல்.பி.எல் இருபது20 கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 27 ஆம் திகதி ஹம்பந்தோட்டை சூரியவெவ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
தொடரில் பங்கேற்கவுள்ள கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் ஹம்பந்தோட்டையை வந்தடைந்திருப்பதாகவும், தொடரை வெற்றிகரமாக நடத்துவதற்கு சகல ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளதாகவும் போட்டி ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.