யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தில் நவீன வசதிகளுடன் கூடிய பிரமாண்டமான உள்ளக விளையாட்டரங்கு இன்று திறந்து வைக்கப்பட்டது.
நாட்டில் தற்போது நிலவும் கொவிட் 19 நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, சுகாதார நடைமுறைகளுக்கமைய திறப்பு விழா நிகழ்வு நடைபெற்றது.
பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரான பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா, இலங்கை பல்கலைக்கழக விளையாட்டு விழாவுக்கான ஏற்பாட்டுக் குழுவின் தலைவராகச் செயற்பட்ட காலத்தில் இந்த விளையாட்டரங்கிற்கான திட்ட முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டிருந்தது.
இதற்கமைய 2017 ஆம் ஆண்டில் அப்போதிருந்த துணைவேந்தரான பேராசிரியர் செல்வி வசந்தி அரசரட்ணத்தினால் அடிக்கல் நாட்டப்பட்டு இதற்கான நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
சுமார் ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் அமர்ந்திருக்கக்கூடிய வசதியைக் கொண்டுள்ள இந்த உள்ளக விளையாட்டரங்கு சர்வதேசத் தர நியமங்களுக்கமைய அமைக்கப்பட்டுள்ளது.
சுமார் 208 மில்லியன் ரூபா செலவில் இந்த விளையாட்டரங்கு அமைக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மைதானத்தின் தென்கிழக்கு மூலையில் அமைக்கப்பட்டுள்ள இந்த உள்ளக விளையாட்டரங்கு திறப்பு விழா நிகழ்வு பல்கலைக்கழக உடற்கல்விப் பணிப்பாளர் கே.கணேசநாதன் தலைமையில் இன்று காலை நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உறுப்பினரும், யாழ். பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான பேராசிரியர் செல்வி வசந்தி அரசரட்ணம் மற்றும் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா ஆகியோர் விளையாட்டரங்கைத் திறந்து வைத்தனர்.
பல்கலைக்கழகத்துக்கு மட்டுமல்லாமல், தேவைநாடும் சகலரும் இந்த உள்ளக விளையாட்டரங்கைப் பயன்படுத்துவதற்கேற்ற முறையில் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உடற்கல்வி அலகுடன் தொடர்பு கொண்டு, இங்குள்ள உள்ளக விளையாட்டு வசதிகளை விளையாட்டுத்துறை சார்ந்தோர் பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.