இலங்கையை பாரிய கடன் பொறிக்குள் தள்ளும் வரவு- செலவுத் திட்டத்தையே அரசாங்கம் முன்வைத்துள்ளதாக ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது.
அரசாங்கத்தின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று முன்வைக்கப்பட்ட நிலையில், இது குறித்து ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
அரசாங்கம் முன்வைத்துள்ள வரவு-செலவு திட்டமானது சகல வகையிலும் கவலையளிக்கக்கூடிய வரவு- செலவு திட்டமாக மாறியுள்ளது.
நாடாக முகங்கொடுக்க நேர்ந்துள்ள பொருளாதார நெருக்கடிக்கும், கொவிட் -19 வைரஸ் நிலைமைகளில் நாம் எதிர்கொள்ளும் நெருக்கடிகளுக்கும் முகங்கொடுக்கக்கூடிய விதத்தில் இந்த வரவு- செலவு திட்டம் அமையவில்லை.
வழமை போன்றே கடன்களை பெற்றுக்கொண்டு செலவு செய்யும் வரவு-செலவுத்திட்டமாகவே இது அமைந்துள்ளது. இந்த வரவு- செலவு திட்டத்திலும் மூன்று பில்லியன் சர்வதேச கடன் எடுத்தே இந்த வரவு – செலவு திட்டத்தை நிரப்பியுள்ளனர்.
2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் மாத்திரம் எமது கடன்களில் ஐந்தாயிரம் பில்லியன் சேர்ந்துள்ளது. ஏற்கனவே இருந்த 13 ட்ரில்லியன் கடன் தொகையுடன் மேலும் ஐந்து ட்ரில்லியன் சேர்கின்றது.
எனவே எமது எதிர்காலம் கடன்களில் இறுகிக்கொண்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.