November 21, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனாவில் இருந்து 12,000 ற்கும் அதிகமானோர் குணமடைந்தனர்: இலங்கையின் இன்றைய நிலவரம்

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 404 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 12,210 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை கொரோனா தொற்றுக்கு உள்ளான 157 பேர் இன்றைய தினத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் நேரடி தொடர்புகளை பேணியவர்கள் என்று கொவிட் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி இலங்கையில் இதுவரையில் அடையாளம் காணப்பட்டுள்ள கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 17,831 ஆக அதிகரித்துள்ளது.

வெளிநாடுகளில் இருந்து 45,000 ற்கும் மேற்பட்டோர் வருகை

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 45,708 இலங்கையர்கள் இதுவரையில் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளதாக கொவிட் தடுப்புக்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 155 பேர் நேற்றைய தினம் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

கட்டார், எத்தியோப்பியா, ஜப்பான், பாகிஸ்தான், இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் இருந்தே அவர்கள் வருகைதந்துள்ளனர்.

அத்துடன் மேலும் 85 பேர் இன்று வந்துள்ளனர். டுபாயிருந்து 26 பேரும், கட்டாரிலிருந்து 59 பேரும் இவ்வாறு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வெளிநாடுகளில் உள்ள கப்பல் பணியாளர்கள் 8012 பேர் இதுவரை நாட்டை வந்தடைந்துள்ள நிலையில், அவர்களில் 81 பேருக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக, இன்றைய தினம் 130 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, அவர்களில் 89 பேர் முப்படையினரால் நடத்திச் செல்லப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கும், 41 பேர் தனியார் விடுதிகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் 64,476 பேர் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்து வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் கொரோனா தொற்றின் அச்சத்தைக் கருத்திற் கொண்டு, சுமார் 30,000 பேர், வீடுகளிலேயே சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புத் தரப்பினருக்கு கொரோனா வைரஸ் தொற்று

கடந்த 24 மணித்தியாலங்களில் பாதுகாப்புத் தரப்பைச் சார்ந்த 21 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

சுகாதார மேம்பாட்டு பணியகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, 8 பொலிஸ் உத்தியோகத்தர்களும், விமானப் படை மற்றும் விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த 5 பேருக்கும், கடற்படையைச் சேர்ந்த 3 பேருக்கும் இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் நேற்று 10,713 பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் மேலும் 1504 பரிசோதனைகளின் முடிவுகள் இன்று வௌியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்  570 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் விசேட அதிரடிப் படையைச் சேர்ந்த 150 பேருக்கும், விமானப் படையைச் சேர்ந்த 33 பேருக்கும், கடற்படையைச் சேர்ந்த 46 பேருக்கும் இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், பாதுகாப்புப் பிரிவை சார்ந்த 799 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.

பேராதனை பொலிஸ் அதிகாரிக்கும் கொரோனா

கண்டி – பேதாரனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் கடந்த சில வாரங்களாக பொலிஸ் நிலையத்திலும், போக்குவரத்து நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு ஒரு பிசிஆர் பரிசோதனை நடத்தப்பட்டதன் ஊடாகவே கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் அவருடன் நெருங்கிய பழகியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் உத்தியோகத்தருக்கு தொற்று எவ்வாறு ஏற்பட்டது என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

24 மணிநேரத்தில் 27 பேர் கைது

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியினை தவிர்த்து செயற்பட்ட குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன, கொழும்பில் இன்று தெரிவித்துள்ளார்.

இதேவேளை தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 30 ஆம் திகதி முதல் இதுவரை 290 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதிப்பொலிஸ் மா அதிபர் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் ட்ரோன் கமெராக்கள் மூலம் கண்காணிக்கும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என பிரதிப்பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார். இந்த நடவடிக்கையூடாக இதுவரை 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.