பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாள் சம்பளம் 1000 ரூபாவாக அதிகரிக்கப்படும் என்று பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
2021 ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 1000 ரூபாவாக உயர்த்துவதற்கு முன்மொழிவதாக, பாராளுமன்றத்தில் இன்று வரவு செலவு திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றும் போது அவர் குறிப்பிட்டுள்ளார்.
தோட்டத் தொழிலாளர்கள் தமது சம்பளத்தை 1000 ரூபாவாக உயர்த்துமாறு வலியுறுத்தி கடந்த பல வருடங்களாக போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், கடந்த மார்ச் மாதம் முதல் அதனை வழங்க நடவடிக்கையெடுப்பதாக இதற்கு முன்னர் பிரதமரினால் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், நாட்டில் தற்போது நிலவும் கொவிட் தொற்று நிலைமையால் அந்த சம்பளத்தை வழங்குவதற்கு பெருந்தோட்ட நிறுவனங்கள் இணங்காத காரணத்தினால் அந்த சம்பளத்தை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே அந்த சம்பளத்தை எதிர்வரும் ஜனவரி முதல் வழங்குவதற்கு முன்மொழிவதாக பிரதமர் இன்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பளத்தை செலுத்த முடியாத தோட்ட நிறுவனங்களின் முகாமைத்துவ ஒப்பந்தத்தை மாற்றியமைப்பதற்கு நடவடிக்கையெடுக்க எதிர்பார்ப்பதாகவும் இதன்போது பிரதமர் தெரிவித்துள்ளார்.