இலங்கையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தை பிரதமரும், நிதி அமைச்சருமான மகிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து, உரையை ஆரம்பித்தார்.
2021 ஆம் ஆண்டுக்கான செலவினங்களுக்காக இந்த வரவு- செலவுத் திட்டத்தின் ஊடாக 267,804 கோடி ரூபா நிதி ஒதுக்கப்படவுள்ளது.
வரவு- செலவுத் திட்ட உரையை ஆரம்பித்து, உரையாற்றும் போது, பிரதமர் மகிந்த ராஜபக்ஷ:
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவைத் தலைமையாகக் கொண்ட அரசாங்கத்தின் சௌபாக்கியத்திற்கான முன்னோக்கு, வரவு செலவுத் திட்டத்தை இந்த சபையில் சமர்ப்பிக்கக் கிடைத்தமையையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன்.
எமது நாடு எவ்வாறான பொருளாதார நிலையில் இருந்தாலும், எவ்வாறான சவால்களுக்கு முகங்கொடுத்திருந்தாலும், நாம் 2021 ஆம் ஆண்டில் வறுமை ஒழிப்புக்கு முன்னுரிமை வழங்கவுள்ளோம்.
தற்போது நாம் முகங்கொடுத்துள்ள கொவிட்- 19 தொற்று நோய் போன்றே ஏனைய நோய்களில் இருந்தும் மக்களை மீட்டெடுக்கக்கூடிய வகையில் சுகாதார சேவையைப் பலப்படுத்தவும் எதிர்பார்க்கின்றோம்.
அனைத்து பிரஜைகளுக்கு சம வாய்ப்புகளை ஏற்படுத்துவதோடு, கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதும் மனித வள அபிவிருத்திக்கான திட்டங்களாகும். மக்களின் தேவைகளுக்கு பதிலளிக்கும், வினைத்திறன்மிக்க அரச சேவையொன்றை உருவாக்குவதும் இன்றைய தேவையாகும்.
2021 வரவு- செலவுத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்
- ‘குரு கெதர’ கல்வி நிகழ்ச்சிகளை மாணவர்கள் தொலைக்காட்சிகளின் ஊடாகப் பார்க்க கிராமப் புற பாடசாலைகளுக்கு தொலைக்காட்சிகள் வழங்க 3,000 மில்லியன் ஒதுக்கீடு.
- கொழும்பு பங்குச் சந்தையில் பதிவுசெய்யப்பட்ட உள்நாட்டு நிறுவனங்களுக்கு 2021 டிசம்பர் 31 வரை 50 வீத வரி விலக்களிக்கப்படவுள்ளது.
- ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம், உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி போன்றவற்றில் இருந்து அடுத்த 5 வருடங்களுக்கு 1,400 மில்லியன் அமெரிக்க டொலர்களை வெளிநாட்டுக் கடன்களாக பெறப்படவுள்ளன.
- கொரோனா பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட தொழில்துறையினருக்கு புதிய காப்புறுதித் திட்டத்தை அறிமுகப்படுத்தல்.
- ஓய்வுபெற்ற, காயமடைந்த, உயிரிழந்த இராணுவ வீரர்களின் நலனுக்காக 750 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
- இலங்கையில் அல்லது கொழும்பு பங்குச் சந்தையில் முதலிடும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மூன்று வருட வரி விலக்களிக்கப்படும்.
- தரவு பாதுகாப்பு, இணைய பாதுகாப்பு மற்றும் புலமைச் சொத்துக்கள் பாதுகாப்புக்காக புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
- வரி தொடர்பான பொதுமக்கள் முறைப்பாடுகளை விசாரணை செய்ய விசேட மேன்முறையீட்டு நீதிமன்றம்.
- தொழில்நுட்பத் துறையை விரிவுபடுத்த 8 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு.
- பொதுமக்கள் பாதுகாப்பை பலப்படுத்த 2,500 மில்லியன் ரூபா செலவில் விசேட திட்டங்கள்.
- வெளிநாட்டுப் பிரஜைகள், வெளிநாட்டு நாணயங்களைப் பயன்படுத்தி சொகுசு வீடுகள் வாங்க அனுமதி.
- வங்கி, நிதி மற்றும் காப்புறுதி நிறுவனங்கள் தவிர்ந்த, மாதமொன்றிற்கு 25 மில்லியனுக்கு அதிகமான வருமானத்தைப் பதிவுசெய்யும் தொழில் முயற்சிகளுக்கு மாறாத 8 வீத வரி.
- தவறான வரி அறிக்கைகளைத் தயாரிக்கும் கணக்காளர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக புதிய சட்டங்கள்.
- வருமான வரி செலுத்துவோருக்கு, இலகுவான ஒன்லைன் வரி செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்படும்.
- விவசாயம், மீன்வளம் மற்றும் கால்நடை வளர்ப்பு தொழில் துறைகளில் ஈடுபட்டுள்ள வணிக நிறுவனங்களுக்கு அடுத்த 5 வருடங்களுக்கு வரி விலக்கு.
- தொலைத்தொடர்பு, மது, சிகரெட், வாகனங்கள் மற்றும் பந்தயம் போன்றவற்றுக்கு விசேட வரி.
- தொழில்நுட்ப கல்லூரிகளில் வருடமொன்றுக்கு 200,000 மாணவர்களை உள்வாங்கத் திட்டம்.
- தொழில் சார் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கு மாதாந்த ஊக்குவிப்புத் தொகையாக 4,000 ரூபா வழங்குவதற்கு 3,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு.
- நாடளாவிய ரீதியில் 5 தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்கப்படும்.
- கொவிட்- 19 தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க மேலும் 18,000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
- 7 வீத வட்டி அடிப்படையில் சமூர்த்தி பயனாளிகளுக்கு புதிய கடன் திட்டம்.
- தனியார் கல்வி நிறுவனங்களுக்கு 5 வருட வரி விலக்கு.
- பின்தங்கிய விகாரைகளை மேம்படுத்த 250 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
- 2021- 2024 ஆம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் 1000 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான விளையாட்டு சார் பொருளாதாரத்தை உருவாக்கத் திட்டம்.
- இலங்கையின் வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு பங்களிப்பு சார் ஓய்வூதிய திட்டம்.
- வெளிநாட்டு செலாவணியை அதிகரிக்கும் நோக்கில் வெளிநாட்டில் பணிபுரிவோர் இலங்கைக்கு அனுப்பும் ஒவ்வொரு டொலருக்கும் 2 ரூபா ஊக்குவிப்பாக செலுத்தப்படும்.
- தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த ஊதியம் 2021 ஜனவரி முதல் 1000 ரூபாவாக அதிகரிக்கப்படும்.
- இலங்கை மத்திய வங்கி சுற்றுலாத்துறை வழங்கிய கடனுதவிகளை மீளச் செலுத்தும் தினத்தை 2021 செப்டம்பர் 30 வரை நீடித்தல்.
- லக்விஜய மின் உற்;பத்தி நிலையத்துக்கு மேலதிகமாக, 300 மெகா வொட்ஸ் அனல் மின்னிலையம் ஒன்றும் 600 மெகா வொட்ஸ் இயற்கை வாயு மின் உற்பத்தி நிலையங்கள் இரண்டும் நிர்மாணிக்கப்படவுள்ளது.
- அதிவேக நெடுஞ்சாலை கட்டுமானப் பணிகள் விஸ்தரிக்கப்படவுள்ளதோடு, கொழும்பின் மெரைன் ட்ரைவ் மொரட்டுவை வரை நீட்டிக்கப்படவுள்ளது.
- புகையிரத வலையமைப்பு 1,300 மில்லியன் முதலீட்டுடன் விரிவுபடுத்தப்படவுள்ளது.
- புகையிரத பெட்டிகளை உள்நாட்டில் உற்பத்தி செய்யத் திட்டம்.
- இரத்தினபுரி அதிவேக நெடுஞ்சாலையை தெற்கு அதிவேக நெடுஞ்சாலையுடன் இணைக்கத் திட்டம்.
- மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் கெரவலப்பிட்டி- மீரிகம- குருணாகலை மற்றும் பொதுஹர- கண்டி பிரிவுகளின் நிர்மாணப் பணிகளை 2024 ஆம் ஆண்டுக்குள் நிறைவு செய்யத் திட்டம்.
- 2023 ஆம் ஆண்டாகும் போது மின் சக்தி வாடிக்கையாளர்களுக்கு நிலையான, புதுப்பிக்கத்தக்க சக்தி விநியோகத்தை உறுதிப்படுத்தல்.
- மீள்சுழற்சி தொழில் துறை முதலீட்டாளர்களுக்கு 10 வருட வரி விலக்கு.
- நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளைத் தீர்க்கும் பொறிமுறையை விரிவுபடுத்தி, உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 20,000 மில்லியன் நிதி ஒதுக்கீடு.
- ஒரு தடவை பயன்படுத்திவிட்டு அப்புறப்படுத்தும் பொலிதீன் மற்றும் பிளாஸ்டிக் உற்பத்தி நடவடிக்கைகளுக்கு 2021 ஜனவரி 1 முதல் தடை.
- நிர்வாகத்துறை சாரா அரச அதிகாரிகள் வேலை நேரம் முடிந்த பின்னர் மேலதிக தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதி.
- வாகன உதிரிப் பாகங்கள் மீதான இறக்குமதி வரி குறைப்பு- இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளும் தளர்த்தப்படும்.
- இலங்கையின் தேசிய பாதுகாப்பு மற்றும் அணி சேரா தன்மையை உறுதிப்படுத்த இரு தரப்பு ஒப்பந்தங்கள் மீளாய்வு செய்யப்படும்.
- நகர அபிவிருத்தி அதிகார சபையால் முன்னெடுக்கப்படும் வீட்டுத் திட்டங்களுக்கு விண்ணப்பிப்போருக்கு 6.25 இலகு வட்டி வீதத்துடன் 25 வருட கடனுதவி.
- யானை- மனித மோதல்களுக்குத் தீர்வு காண 3000 மில்லியன் ஒதுக்கீடு.
- வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்குச் செல்ல விரும்பும் அரச ஊழியர்களுக்கு 2 வருட விடுமுறை.
- ஆண், பெண் என இருபாலாரது ஓய்வூதிய வயதை 60 வரை நீடிக்க திட்டம்.