November 25, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கென வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தல்

File photo: Twitter/Amnesty International South Asia

இலங்கையின் உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோருக்கு உண்மை, நீதி மற்றும் இழப்பீடுகளை வழங்குவதில் இலங்கை அரசாங்கம் உறுதியெடுக்க வேண்டுமென்று  அம்னெஸ்டி இண்டர்நேஷனல் வலியுறுத்தியுள்ளது.

2021 ஆம் ஆண்டிற்கான வரவு- செலவுத் திட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளதை முன்னிட்டே, அம்னெஸ்டி இண்டர்நேஷனல் இவ்வாறு வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில், அம்னெஸ்டி இண்டர்நேஷனல் பொதுச் செயலாளர் அலுவலகத்தின் பணிப்பாளர் டேவிட் கிரிஃபித்ஸ் அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளார்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதிச் செயன்முறைக்கு வழிவகுத்த ஐநாசபையின் மனித உரிமைகளுக்கான பேரவையின் தீர்மானத்தில் இருந்து இலங்கை அரசாங்கம் கடந்த பெப்ரவரி மாதம் விலகிக்கொண்டமை, காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய அலுவலகம் மற்றும் இழப்பீடுகளுக்கான அலுவலகம் ஆகியவற்றின் செயற்பாடுகள் தொடர்பான கரிசனையை ஏற்படுத்தியுள்ளதாகவும் அம்னெஸ்டி சுட்டிக்காட்டியுள்ளது.

யுத்தத்தினால் மோசமாக பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோர் நீண்ட காலமாகப் போராடிய உண்மை, நீதி மற்றும் இழப்பீடுகளைப் பெற்றுக்கொள்வதற்கு மேற்படி இரண்டு அலுவலகங்களும் பொறிமுறைகளாகக் காணப்பட்டதாகவும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.

இலங்கை வரலாற்றில் இந்த இருண்ட யுகத்தின் அத்தியாயத்தை மூடுவதற்கு காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய அலுவலகம் மற்றும் இழப்பீடுகளுக்கான அலுவலகம் ஆகியன திறம்படச் செயற்படுவதை இலங்கை அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு பயனுள்ள தீர்வுகளை வழங்குவதற்காக அந்த இரண்டு அலுவலகங்களுக்கும் போதுமான நிதியை 2021 வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக இலங்கை அரசாங்கம் ஒதுக்க வேண்டும் என்றும் அம்னெஸ்டி கேட்டுக்கொண்டுள்ளது.

2019 நவம்பரில் ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இடைக்கால நிவாரணக் கொடுப்பனவுகளை வழங்குவதை நிறுத்தியுள்ளமை நிதி நெருக்கடி நிலைமையை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

பொறுப்புக் கூறல் தொடர்பான இரண்டு அலுவலகங்களுக்கும் போதுமான வளங்களை 2021 வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக வழங்கி, அவற்றை முழுமையாக இயக்கச் செய்ய வேண்டும் என்றும் இலங்கை அரசாங்கத்துக்கு அம்னெஸ்டி வேண்டுகோள் விடுத்துள்ளது.