November 25, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

2021 ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத் திட்டம் இன்று பாராளுமன்றத்திற்கு

பிரதமரும் நிதி அமைச்சருமான மஹிந்த ராஜபக்‌ஷ 2021ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்பித்து உரையாற்றவுள்ளார்.

இன்று பிற்பகல் 1.40 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளது.

இதன் பின்னர் வரவு – செலவுத்திட்ட அறிக்கையை மஹிந்த ராஜபக்‌ஷ முன்வைக்கவுள்ளார்.

பிரதமரினால் வரவு – செலவுத்திட்டம் முன்வைக்கப்பட்ட பின்னர் நாளை முதல் எதிர்வரும் 21ஆம் திகதி வரை வரவு – செலவுத் திட்டம் தொடர்பான இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் நடைபெறும்.

இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 21ஆம் திகதி மாலை 5 மணிக்கு நடத்தப்படும்.

இதன் பின்னர் வரவு – செலவுத் திட்ட குழுநிலை விவாதம் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் டிசம்பர் 10ஆம் திகதிவரை நடத்தப்படும். டிசம்பர் 10ஆம் திகதி மாலை 5 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்படும்.

வரவு – செலவுத்திட்டம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும் இன்று முதல் வரவு – செலவுத்திட்ட விவாதம் நடத்தப்படும் முழுமையான காலப்பகுதியில் சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களுக்கு அமைய அமர்வுகளை நடத்துவதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாக செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்தார்.

வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் நிதி அமைச்சின் அனுமதியளிக்கப்பட்ட அதிகாரிகளுக்கு மாத்திரம் அமர்வுகளைப் பார்வையிட அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதுடன், வரவு – செலவுத்திட்டம் முன்வைக்கப்படும் காலப்பகுதியில் சபாநாயகரின் கலரியில் சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களுக்கு அமைய ஆசன ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கும். பொதுமக்கள் கலரி மற்றும் ஊடகவியலாளர் கலரி என்பன தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும்.

வரவு – செலவுத்திட்டம் முன்வைக்கப்பட்ட பின்னர் நிதி அமைச்சரினால் சம்பிரதாயபூர்வமாக ஏற்பாடு செய்யப்படும் தேனீர் விருந்துபசாரம் இவ்வருடம் இடம்பெறவிருக்கின்றபோதும், பாராளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் விசேட விருந்தினர்களுக்காக மாத்திரம் இது மட்டுப்படுத்தப்பட்டிருக்கும்.