அதிக சனத்தொகையைக் கொண்ட கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளை குறைந்தது மூன்று வாரங்களாவது முற்றாக முடக்குமாறு கொழும்பு மாநகர மேயர் ரோஸி சேனாநாயக்க அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் தீவிரமாகக் கொரோனா வைரஸ் தொற்று பரவிவரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியது மிகவும் அவசியம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“கொழும்பு மாநகர சபையை 21 நாட்கள் முழுமையாக முடக்கி கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவராவிட்டால் மிக மோசமான நிலைமை ஏற்படும்.
மட்டக்குளியின் சில பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த சிலர் தனிமைப்படுத்தல் உத்தரவை மீறி வேலைக்காக வீடுகளை விட்டு வெளியேறியதை நாங்கள் அறிந்துள்ளோம்.
கொழும்பில் கொரோனா மரணங்கள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் வாழும் வயோதிபரின் எண்ணிக்கை அதிகம். இந்தநிலையில் அவர்களைக் காப்பாற்ற முடியுமா? என்ற கேள்வி உள்ளது.
தனிமைப்படுத்தல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டாலும் குடிசைவாசிகளுக்கு இது எவ்வாறு பொருந்தும்? என்ற கேள்வியும் உள்ளது.
இந்தநிலையில் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளைக் குறைந்தது 3 வாரங்களாவது முடக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.