November 25, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மாவீரர் தின நினைவேந்தலை பொது வெளியில் நடத்துவதற்கு இடமளிக்க முடியாது; இராணுவத் தளபதி

போரில் மரணித்த சாதாரண மக்களை நினைவு கூர்வதற்கான உரிமை அவர்களின் உறவினர்களுக்கு இருக்கின்றது. அதனை வீட்டில் இருந்து செய்யலாம். ஆனால், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு புத்துயிர் கொடுக்கும் வகையில் மாவீரர் தின நினைவேந்தலைப் பொது வெளியில் நடத்துவதற்கு இடமளிக்க முடியாது. அதை மீறி நடத்தினால் தனிமைப்படுத்தல் சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படும் என கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாட்டில் தனிமைப்படுத்தல் சட்டம் நடைமுறையில் உள்ளது. மக்கள் ஒன்று கூடுவது தொடர்பில் சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் வெளியிடப்பட்டுள்ளன. மேற்படி நடைமுறைகளை மீறி ஏனையோரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் பொது வெளியில் எவராவது செ யற்பட்டால் அவர்களுக்கு எதிராகப் பொலிஸாரால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.

போரில் மரணித்த சாதாரண மக்களை நினைவுகூர்வதற்கான உரிமை அவர்களின் உறவினர்களுக்கு இருக்கின்றது. அதனை வீட்டில் இருந்து செய்யலாம். ஆனால், பயங்கரவாத அமைப்பில் இருந்து பெரிய அழிவுகளை ஏற்படுத்திவிட்டு உயிரிழந்தவர்களை அதுவும் பொது வெளியில் குழுக்களாக இணைந்து நினைவுகூர்வது ஏற்புடைய நடவடிக்கையாக இருக்காது. உலகில் எந்தவொரு நாடும் இதற்கு அனுமதி வழங்காது.

எனவே, தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புக்குப் புத்துயிர் கொடுக்கும் வகையிலும், அவ்வமைப்புக்குப் பரப்புரை செய்யும் நோக்கிலும் பொதுவெளியில் நினைவேந்தல் நிகழ்வு நடத்தப்படுமானால் சுகாதாரப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுமானால் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.