October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை சாதனையாளர்கள்

ஒக்டோபர் 11ஆம் திகதி நடைபெற்ற தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. இம்முறை பரீட்சையில் அகில இலங்கை மட்டத்தில் 10 மாணவர்கள் 200 புள்ளிகளைப் பெற்று சாதனை புரிந்துள்ளனர்.

இவர்களில் சிங்கள மொழி மூலம் தோற்றிய கொழும்பு சாஹிரா கல்லூரி மாணவன் பர்ஷான் மொஹமட் அம்மார், காலி சங்கமித்தா மகளிர் கல்லூரி மாணவி சியதி விதுமிஷா, கண்டி உயர் பெண்கள் பாடசாலை மாணவி யெஹாரா யெத்மினி, எஹலியகொட ஆரம்ப பாடசாலை மாணவி சேனுதி தம்சரா, எம்பிலிப்பிட்டிய ஜனாதிபதி கல்லூரி மாணவன் தொவிந்து சிரன்ஜித் ஆகியோர் 200 புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.

அத்துடன் தங்காலை முன்மாதிரி ஆரம்ப பாடசாலை மாணவன் பசிந்து கவிஷான், பொலனறுவை சிறிபுர ஆரம்ப பாடசாலை மாணவன் தெனுஜ மனுனித பண்டார, இங்கிரிய சுமனஜோதி ஆரம்பப் பாடசாலை மாணவி தெவ்லி யசஸ்மி மற்றும் பண்டாரகம தேசியப் பாடசாலை மாணவன் ஹினுட சஸ்மித குணதிலக்க மற்றும் பன்னிப்பிட்டி தர்மபால கல்லூரி மாணவன் ஹேவகே சிஹத் சதிந்து என்ற ஆகியோரும் 200 புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.

இதேவேளை தமிழ் மாணவர்கள் பலரும் சிறந்த புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.

அதீபத் செய்னா

 புத்தளம் சாஹிரா கல்லூரி

புத்தளம் ஸாஹிரா கல்லூரி மாணவி முகமட் அல்சாத் அதீபாத் ஷைனா 199 புள்ளிகளைப் பெற்று தமிழ் மொழி மூலம் பரீட்சைக்கு தோற்றியோரில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்துள்ளார்.

யாழ். தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி

ஜனுஸ்கா

யாழ். தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி மாணவி சுபாஸ்கரன் ஜனுஸ்கா 198 புள்ளிகளைப் பெற்று அகில இலங்கை
ரீதியில் இரண்டாவது நிலையைப் பெற்றுள்ளதுடன் வடக்கு மாகாணத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

வவுனியா இறம்பைக்குளம் மகளிர் வித்தியாலம்

வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலய மாணவி அஸ்வின்யா ஜெயந்தன் 196 புள்ளிகளை பெற்று சித்தியடைந்துள்ளார்.

வவுனியா பொது வைத்தியசாலையின் வைத்தியர்களான விசேட வைத்திய நிபுணர் ஜெயந்தன் தம்பதியினரின் மகளான இவர் 196 புள்ளிகளை பெற்று மாவட்டத்தில் அதிகூடிய புள்ளிகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ். இந்து ஆரம்பப் பாடசாலை

எதிர்காலத்தில் பொறியியலாளராகி வடக்கு மக்களுக்கு சேவையாற்ற விரும்புகின்றேன் என யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலையில் 195 புள்ளிகளைப் பெற்ற மாணவன் ச. ஆர்வலன் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த பரீட்சையினை பொறுத்தவரைக்கும் பாடசாலை மற்றும் தனியார் வகுப்புக்கு சென்றாலும் வீட்டில் அதனை மீட்டு படிப்பதன் மூலமே இந்த பரீட்சையில் இலகுவாக சித்தி அடைய முடியும்.

அத்தோடு 195 புள்ளி பெறுவதற்கு உதவிய பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் மற்றும் தனது பெற்றோருக்கு தனது நன்றிகளையும் தெரிவித்தார்.

இதேவேளை யாழ் இந்து ஆரம்பப் பாடசாலை புலமைப் பரிசில் பெறுபேற்றின் படி கடந்த வருடத்தோடு ஒப்பிடும் போது இந்த வருடம் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களின் வீதம் அதிகரித்துள்ளதாகவும் இவ்வருடம் 63 வீதமானவர்கள் பரீட்சைக்கு தோற்றி சித்தி அடைந்துள்ளார்கள் என பாடசாலை அதிபர் என்.மகேந்திரராஜா தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் புனித ஜோன் பொஸ்கோ

யாழ்ப்பாணம் புனித ஜோண் பொஸ்கோ வித்தியாலயத்தில் வரலாற்றில் அதிகமான மாணவர்கள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்றுள்ளனர். இம்முறை 228 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியுள்ளனர்.

குறிப்பாக நல்லூர் செட்டித்தெருவில் வசிக்கும் பொறியியளாளர்களான அஞ்ஜிதன் , குமுதினி ஆகியோரின் மகளான அஞ்ஜிதன் அஜினி எனும் மாணவி 2020ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 195 புள்ளிகளைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மாணவர்களில் 159 மாணவர்கள் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் வெட்டுப்புள்ளி 160 புள்ளிகள் என்ற நிலையைத் தாண்டி பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர்.  பாடசாலையின் கடந்த கால சித்திகளுடன் ஒப்பிடும் போது வரலாற்றில் அதி உயர் சித்தியாக 70 வீதம் பதிவாகியுள்ளது.

ஹப்புகஸ்தென்ன தமிழ் வித்தியாலயம்

நுவரெலியா மாவட்டத்தில் அட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட மஸ்கெலியா மற்றும் சாமிமலை அப்கட் பகுதிகளை சேர்ந்த இரு மாணவர்கள் 196 அதி கூடிய புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.

மஸ்கெலியா ஹப்புகஸ்தென்ன தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயின்ற நந்தகுமார் நவீஷனா 196 புள்ளிகளை பெற்றுள்ளார்.

அதேபோல் சாமிமலை அப்கட் டீசைட் தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயின்ற மதியழகன் சவிதரன் 196 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.

திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி

ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் கல்வி பயின்ற கஜேந்திரன் கார்த்திகேயன் 195 புள்ளிகளை பெற்று கல்லூரிக்கும் திருகோணமலை மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

இதேவேளை 56 மாணவர்கள் வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்றுள்ளனர். திருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரி கடந்த மூன்று வருடங்களாக தொடர்ந்து மாவட்ட மட்டத்தில் முதல் இடத்தை தக்க வைத்துள்ளது.

சென்ற வருடம் அந்தப் பாடசாலை அகில இலங்கை ரீதியில்197 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.