November 21, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்பில் அதிக தொற்றாளர்கள்: இலங்கையின் கொரோனா நிலவரம்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 311 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய நாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11,806  ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை இன்றைய தினத்தில்  கொரோனா தொற்றுக்கு உள்ளான 229 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்று நோய் ஆய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி இலங்கையில் இதுவரையில் அடையாளம் காணப்பட்டுள்ள தொற்றாளர்களின் எண்ணிக்கை 17,516 ஆக உயர்வடைந்துள்ளது.

கொழும்பில் அதிகமான தொற்றாளர்கள்

நேற்றைய தினத்தில் 704 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களில் அதிகமானர்கள் கொழும்பை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் 541 பேருக்கும், கம்பஹா மாவட்டத்தில் 39 பேருக்கும், காலி மாவட்டத்தில் 08 பேருக்கும் நேற்றைய தினத்தில் தொற்று உறுதி செய்யப்பட்டதாக தொற்று நோய் ஆய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

கட்டுப்பாட்டுக்குள் வந்தது மினுவாங்கொட கொத்தணி

இலங்கையின் இரண்டாவது கொரோனா வைரஸ் கொத்தணியாக அடையாளம் காணப்பட்ட, மினுவாங்கொட கொத்தணி தற்போது முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அந்தக் கொத்தணியில் 3,106 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், அவர்களுள் தற்போது 136 பேர் மாத்திரமே சிகிச்சைப் பெற்ற வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது பேலியாகொட மீன் சந்தை  கொத்தணியுடன் தொடர்புபட்ட தொற்றாளர்களே அடையாளம் காணப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொத்தணியில் 8070 பேர் குணமடைந்தனர்

முப்படையினரால் நடத்தப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் 3168 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், மினுவாங்கொட – பேலியகொடை கொரோனா கொத்தணியில் இருந்து இதுவரை 8070 பேர் குணமடைந்துள்ளனர்.

வெளிநாடுகளில் இருந்து 91 பேர் நாடு திரும்பினர்

வெளிநாடுகளில் இருந்து 91 இலங்கையர்கள் இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.

கட்டாரில் இருந்து 12 பேரும், இந்தோனேஷியாவில் இருந்து 78 பேரும் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நடத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனையின் பின்னர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் 35 பொலிஸாருக்கு கொரோனா

தம்புத்தேகம – பஹலகம பொலிஸ் பயிற்சி கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 35 பொலிஸாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்தின் பல்வேறு பொலிஸ் நிலையங்களிலும் கடமையாற்றிய 115 பொலிஸார் குறித்த பயிற்சி நிலையத்துக்கு தனிமைப்படுத்தலுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களிடம் நடத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனையில்  35 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

கைதிகளுக்கு சிகிச்சையளிக்க தனியான வைத்தியசாலை

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகும் கைதிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக சில வைத்தியசாலைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய பொலனறுவை, கல்லேல்ல, கந்தக்காடு மற்றும் வெலிகந்த ஆகிய பிரதேசங்களிலுள்ள வைத்தியசாலைகள் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சுதர்சனி பெர்ணான்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.

புதிதாக சிறைச்சாலைகளுக்கு அழைத்து வரப்படும் கைதிகளே இவ்வாறு தொற்றுக்குள்ளாவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.