கொழும்பு தாமரை தடாகத்தை அண்மித்த பகுதியிலுள்ள வாகன காட்சியறை மீது சொகுசு வாகனம் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் யுவதி உட்பட இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நுகேகொடை பொலிஸ் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் மகள் சாரதி அனுமதிப் பத்திரமின்றி வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று மாலை இடம்பெற்ற இந்த விபத்தில், வாகன காட்சியறை உட்பட காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த இரண்டு கார்களுக்கும் சேதம் ஏற்பட்டிருந்த நிலையில், கறுவாத்தோட்ட பொலிஸாரினால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் புதுகடை நீதவான் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கொழும்பு, தாமரை தடாகம் அருகே வாகன காட்சியறையில் மோதிய சொகுசு வாகனத்தை தான் செலுத்தவில்லை என்று விபத்து இடம்பெற்ற இடத்திலிருந்த யுவதி தனது முகநூல் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.
குறித்த விபத்து தொடர்பில் வெளியான புகைப்படங்களில் இருந்த, சின்டி விக்ரமநாயக்க என்ற யுவதியே இந்த பதிவினை வெளியிட்டுள்ளார்.
“சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் செய்தி பொய்யானது. வாகனத்தை நான் செலுத்தவில்லை. எனது தந்தை பொலிஸ் அதிகாரியும் இல்லை. எனக்கு அண்ணன் ஒருவரும் இல்லை. எனது நண்பர்களே விபத்தை எதிர்கொண்டனர். உதவிக்காகவே நான் அங்கு சென்றேன்” என்று அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த விபத்தை எதிர்கொண்டவர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் ரத்நாயக்கவின் மகள் என்றும், இந்த படத்தில் உள்ளவர் அவரது நண்பி என்றும் சின்டி விக்ரமநாயக்க பதிவிட்டுள்ளார்.
இதேநேரம், கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி அதிகாலை கொள்ளுபிட்டிய பொலிஸ் நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த பொலிஸ் போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி மீது டிபென்டர் வாகனமொன்று மோதி, ஏற்பட்ட விபத்தில் கைதுசெய்யப்பட்ட இளைஞன், குறித்த யுவதியின் சகோதரரே என்றும் தெரிவிக்கப்படுகின்றது.