July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

புலமைப்பரிசில் பரீட்சை: புத்தளம் மாணவி 199; யாழ்.மாணவி 198 புள்ளிகளுடன் முன்னிலை

சுபாஸ்கரன் ஜனுஸ்கா

இலங்கையில் ஐந்தாம் தர மாணவர்களுக்கு நடத்தப்படும் புலமைப்பரிசில் பரீட்சையில், தமிழ் மொழி மூலத்தில் புத்தளம் ஸாஹிரா கல்லூரி மாணவி மொஹமட் அல்சாத் அதீபாத் ஷைனா 199 புள்ளிகளுடனும் மகாஜனக் கல்லூரி மாணவி சுபாஸ்கரன் ஜனுஸ்கா 198 புள்ளிகளுடனும் அகில இலங்கை ரீதியில் இந்த ஆண்டு முன்னிலை பெற்றுள்ளனர்.

வடக்கில் யாழ்.மாவட்டத்தில் வழமைபோல் இம்முறையும் புனித பொஸ்கோ ஆரம்பப் பாடசாலை மற்றும் யாழ். இந்து ஆரம்பப் பாடசாலை ஆகியவற்றில் அதிக மாணவர்கள் வெட்டுப்புள்ளியைத் தாண்டி (160) சித்தி பெற்றுள்ளனர்.

யாழ். இந்து ஆரம்பப் பாடசாலையில் பரீட்சைக்குத் தோற்றிய 232 மாணவர்களில் 149 பேர் சித்தியடைந்துள்ளனர். புனித பொஸ்கோ ஆரம்பப் பாடசாலையில் 159 பேர் சித்தியடைந்துள்ளனர்.

யாழ். தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியில் 38 மாணவர்கள் வெட்டுப்புள்ளி 160 புள்ளிகள் என்ற நிலையைத் தாண்டி பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர்.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளை வெளியிட்டுள்ள பரீட்சைகள் திணைக்களம் இம்முறை மாவட்ட மற்றும் தேசிய தர நிலைகளை வழங்கவில்லை.
அவ்வாறே, முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு ஸ்ரீ சுப்பிரமணிய வித்தியாசாலை மாணவன் முரளிதரன் அஸ்விகன் 196 புள்ளிகளைப் பெற்றுள்ளார். அந்தப் பாடசாலையில் 46 பேர் வெட்டுப்புள்ளியை விடக் கூடுதலான புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டம் விசுவமடு விசுவநாதர் ஆரம்பப் பாடசாலை மாணவன் ர.நிதுஷன் 195 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.

கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் 70 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.

இதனிடையே, அகில இலங்கை ரீதியில் சிங்கள மொழி மூலத்தில் மொகமட் பர்ஸான் மொகமட் அம்மார், காலி சங்கமித்தா பாலிகா கல்லூரியின் மாணவி விதும்சா சதுந்தி கருணாதிலக உள்ளிட்ட 10 மாணவர்கள் 200 புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.