November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

250 பேர் கலந்துகொண்ட கூட்டத்தை ஏன் தடுத்து நிறுத்தவில்லை?; ஸ்ரீதரன் எம்.பி.கேள்வி

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த அமைச்சர்கள் உட்பட 250 பேர் இரண்டு நாட்கள் நடத்திய கூட்டத்தினை ஏன் தடுக்கவில்லை என பொலிஸாரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கேள்வியெழுப்பியுள்ளார்.

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி சிரமதானப் பணிகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளையில், கிளிநொச்சி பொலிஸார் அவ்விடத்துக்கு வருகை தந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்,வடக்கு மாகாண சபையின் முன்னாள் கல்வி அமைச்சர் குருகுலராஜா, வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பசுபதிப்பிள்ளை, கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதன் ஆகியோரிடமும் வாக்கு மூலத்தை பதிவு செய்ததுடன், அங்கு வருகை தந்தவர்களிடமும் தரவுகளை சேகரித்து சென்றுள்ளனர்.

இவ்வேளையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனிடம்,நாடு பூராகவும் கொரோனா தொற்று நோயின் அபாயகரமான சூழலில் தற்போது 30 பேருக்கு மேல் நிகழ்வுகளில் கலந்து கொள்ள முடியாது என்பது உங்களுக்கு தெரியாதா என பொலிஸார் கேட்டபோது, யாழ்ப்பாணத்தில் இந்த மாதத்தின் 6 ஆம் 8 ஆம் திகதிகளில் கொழும்பில் இருந்து வந்த அமைச்சர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் 250 பேருக்கு மேல் இரண்டு நாட்களிலும் கலந்து கொண்டனர். அந்தக்கூட்டமானது சிறிய மண்டபத்தில் தான் நடைபெற்றது. அந்த மண்டபத்தில் 250 பேருக்கு மேல் கூடலாம் என்றால், 7ஏக்கர் பரப்பளவு கொண்ட காணியில் 30 பேர் கலந்து கொள்வதா உங்களுக்கு பிரச்சினை என்றும், அந்த கூட்டத்தை நடத்திய போது பொலிஸாருக்கு தெரியாதா எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் பொலிசாரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.