‘கருணா அம்மான்’ என்றழைக்கப்படும் முன்னாள் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் மீது கிழக்கு மாகாண மக்களால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, அரசாங்கம் விசாரணை செய்ய வேண்டும் என்று இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
http://https://youtu.be/1Lq1eTdp3uM
மட்டக்களப்பு வில்லியம் ஆல்ட் மண்டபத்தில் இன்று நடைபெற்ற இரத்ததான நிகழ்வில் கலந்துகொண்டிருந்த போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்பு அமைச்சரொருவர் வேலை வாய்ப்புக்கான விண்ணப்பத்துக்கு 20 ஆயிரம் ரூபா பணத்தை வாங்கிவிட்டு வேலைவாய்ப்பு கொடுத்துள்ளதாக கருணா அம்மானால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதாகவும், அந்தக் குற்றச்சாட்டு பொய்யானது எனவும் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் அதன்போது தெரிவித்துள்ளார்.
அவரின் இந்தக் குற்றச்சாட்டு ஒரு வகையான பொறாமையின் வெளிப்பாடாகும் என்றும், அவர் மக்கள் மத்தியில் பிரபல்யமானவர்களின் பெயரை உச்சரித்து தன்னைப் பிரபல்யமாகிக்கொள்ள வேண்டும் என நினைத்து செயற்படுபவர்கள் எனவும் இதனால் அவரின் கருத்துக்கள் தொடர்பாக தான் கண்டுகொள்வது இல்லையெனவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கருணா அம்மான் தொடர்பாக கிழக்கு மாவட்ட மக்களிடையே குற்றச்சாட்டுகள் உள்ளதாகவும், இது தொடர்பாக அரசாங்கம் விசாரணைகளை நடத்த வேண்டுமெனவும் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தன் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் தான் அரசியலில் இருந்து விலகுவதற்கு தயாராக இருப்பதாகவும், அதேபோன்று அதனை நிரூபிக்க முடியாவிட்டால் கருணா அம்மான் அரசியலில் இருந்து விலக வேண்டுமெனவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.