October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

2021 ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் செலவீனங்களுக்காக 267,804 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு

File Photo

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையிலான அரசாங்கத்தின் 2021 ஆம் ஆண்டுக்கான செலவீனங்களுக்காக வரவு – செலவு திட்டத்தின் ஊடாக 267,804 கோடி ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடாக 200,054 கோடி ரூபா ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், 2021 ஆம் ஆண்டுக்காக மேலதிகமாக 67750 கோடி ரூபாவை ஒதுக்கி வரவு – செலவு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 17 ஆம் திகதி பிற்பகல் 1.40 மணியளவில் பிரதமரும் நிதி அமைச்சருமான மகிந்த ராஜபக்‌ஷவினால் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்த வரவு – செலவு திட்டத்தின் ஊடாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் விசேட செலவீனங்களுக்கான 1960 கோடியே 33 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அமைச்சிற்கு 694 கோடியே 60 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில் பெளத்த விவகாரங்கள் தொடர்பான அமைச்சிற்கு 360 கோடியே 60 இலட்சம் ரூபாவும், முஸ்லிம் சமய பண்பாடு அலுவல்கள் திணைக்களத்திற்கு 19 கோடியே 60 இலட்சம் ரூபாவும், கிறிஸ்தவ சமய அலுவல்கள் திணைக்களத்திற்கு 27 கோடியே 90 இலட்சம் ரூபாவும், இந்து சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்கு 31 கோடியே 80 இலட்சம் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த அமைச்சுடன் தொடர்புடைய இராஜாங்க அமைச்சிற்கு 60 கோடியே 40 இலட்சம் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி – பிரதமரின் கீழுள்ள அமைச்சுகளுக்கு அதிக நிதி

இதேவேளை பிரதமரின் கீழுள்ள நிதி அமைச்சிற்கு 15760 கோடியே 37 இலட்சத்து 15 ஆயிரம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. நிதி மூலதன சந்தை, மற்றும் அரச தொழில் முயற்சிகள், மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சிற்கு 3299 கோடியே 31 இலட்சத்து 75 ஆயிரம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக வரவு – செலவு திட்டத்தின் வரைபில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் ஜனாதிபதியின் கீழுள்ள பாதுகாப்பு அமைச்சிற்கு 35515 கோடியே 92 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சிற்கு 2520 கோடியே 45 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவும் உள்ளக பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சிற்கு 15246 கோடியே 92 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சிற்கு 15947 கோடியே 59 இலட்சத்து 98 ஆயிரம் ரூபாவும், சுதேச வைத்திய, ஆயுர்வேத மற்றும் சுகாதார இராஜாங்க அமைச்சிற்கு 264 கோடியே 90 இலட்சம் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சிற்கு 12654 கோடி ரூபாவும், மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சிற்கு 3045 கோடியே மூன்று இலட்சம் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

வெகுசன ஊடக அமைச்சிற்கு 519 கோடியே 21 இலட்சத்து 45 ஆயிரம் ரூபாவும் அதனுடன் கூடிய தபால் சேவைகள் மற்றும் வெகுசன ஊடக அபிவிருத்தி இராஜாங்க அமைச்சிற்கு 1575 கோடியே 36 இலட்சத்து 24 ஆயிரம் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

நீதி அமைச்சிற்கு 1975 கோடியே 38 இலட்சத்து 77 ஆயிரம் ரூபாவும், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, சிறைக்கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சிற்கு 1038 கோடியே 89 இலட்சத்து 61ஆயிரம் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டலுவல்கள் அமைச்சிற்கு 1284 கோடியே 94 இலட்சத்து 55 ஆயிரம் ரூபாவும், பிராந்திய உறவு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சிற்கு 16 கோடியே 75 இலட்சம் ரூபாவும், போக்குவரத்து அமைச்சிற்கு 4140 கோடியே 90 இலட்சம் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளதாக வரவு செலவு திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வலுசக்தி அமைச்சிற்கு 25 கோடியே 26 லட்சத்து 50 ஆயிரம் ரூபாவும், வர்த்தக அமைச்சிற்கு 562 கோடியே 26 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவும், நெடுஞ்சாலைகள் அமைச்சிற்கு 33018 கோடியே 50 இலட்சத்து ஐயாயியம் ரூபாவும், மின்சக்தி அமைச்சிற்கு 31 கோடியே 29 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், காணி அமைச்சிற்கு 832 கோடியே 80 இலட்சம் ரூபாவும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சிற்கு 172 கோடியே ஒரு இலட்சத்து 44 ஆயிரம் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளதாக வரவு செலவு திட்ட வரைபில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சிற்கு 27172 கோடியே 30 இலட்சம் ரூபாவும்,பெருந்தோட்ட அமைச்சிற்கு 128 கோடியே 98 இலட்சம் ரூபாவும், கடற்தொழில் அமைச்சிற்கு 458 கோடியே 41 இலட்சம் ரூபாவும், சுற்றுலாத்துறை அமைச்சிற்கு 185 கோடியே 79 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், சுற்றாடல் அமைச்சிற்கு 199 கோடியே 71 இலட்சம் ரூபாவும்,விளையாட்டுத்துறை அமைச்சிற்கு 1092 கோடியே 76 இலட்சத்து 15 ஆயிரம் ரூபாவும், ஏனைய அமைச்சுக்கள் மற்றும் இராஜாங்க அமைச்சுக்களுக்கு என 267804 கோடி ரூபாவும் அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்டுள்ளது.