November 21, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“பஸில் ராஜபக்‌ஷ மீண்டும் பாராளுமன்றம் வரவேண்டும்”: 19 எம்.பி.க்கள் கடிதம்

இலங்கை அரசியலில் ஏற்பட்ட புதிய ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான திரைமறைவு அரசியல் காய்நகர்த்தல்களை முன்னின்று நடத்தியவராக பார்க்கப்படும், ஜனாதிபதி மற்றும் பிரதமரின் சகோதரருமான பஸில் ராஜபக்‌ஷவை நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்குமாறு ஆளுங்கட்சி உறுப்பினர்கள் சிலர் கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளனர்.

நல்லாட்சி அரசாங்கத்திற்கு முந்தைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ அரசாங்கத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக இருந்து, பின்னர் இப்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் கொவிட் -19 பொருளாதார அபிவிருத்தி குழுவின் தலைவராக பணியாற்றும் பஸில் ராஜபக்‌ஷவை தேசிய பட்டியலின் மூலமாக மீண்டும் பாராளுமன்றத்திற்கு வருமாறு ஆளும் கட்சியின் 19 உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ள கடிதத்தில் கோரியுள்ளனர்.

“நான்கு ஆண்டுகள் என்ற குறுகிய காலத்தில், உள்ளூராட்சி சபைத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலை வெற்றிகொள்ளவும், குறுகிய காலத்தில் புதிய கட்சி ஒன்றினை உருவாக்கி அதிகாரத்திற்கு கொண்டுவரவும் நீங்களே முன்னின்றீர்கள்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை உருவாக்கி கீழ் மட்டத்தில் இருந்து உயர்மட்டம் வரையில் நிர்வகித்ததும் நீங்களே. தொடர்ந்தும் உங்களின் ஒத்துழைப்பும் தலைமைத்துவமும் எமக்கு தேவைப்படுகின்றது.

கட்சியின் ஸ்தாபகராகிய நீங்கள் இன்று பாராளுமன்றத்தில் அங்கம் பெறவில்லை. நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பவும், கட்சியை பலமாக்கவும் நீங்கள் மீண்டும் பாராளுமன்றத்திற்கு வரவேண்டும்” என அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

தற்போது பாராளுமன்றத்தில் ஆளுந்தரப்பு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக அங்கம் வகிக்கும் ஜயந்த கெட்டகொட, பஸில் ராஜபக்‌ஷவை மீண்டும் பாராளுமன்றத்திற்கு கொண்டுவருவதற்காக இராஜினாமா செய்யத் தயாராக உள்ளதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.