தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் மீது இளைஞர் குழு ஒன்று தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மன்னாரிலிருந்து வவுனியா நோக்கி நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் வாகனத்தில் வந்துகொண்டிருந்த போது, இன்று இரவு 7 மணியளவில் கற்பகபுரம் 4 ம் கட்டை பகுதியில் இளைஞர் குழுவினர் அவரின் வாகனத்தினை வழிமறித்துள்ளனர்.
அதனையடுத்து வாகனத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் வாகனத்திலிருந்து இறங்கி அந்த இளைஞர்களுடன் உரையாட முற்பட்ட சமயத்தில் அவர் மீது தாக்குதல் நடத்த முயற்சித்ததாகவும் அவரது வாகனத்துக்கும் இளைஞர்கள் சேதம் விளைவித்ததாகவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக பாதுகாப்பு உத்தியோகத்தர் மேல் நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதை அடுத்து அந்த இளைஞர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் நடத்திய வவுனியா பூவரசங்குளம் பொலிஸார், சிசிடிவியின் உதவியுடன் சந்தேகத்தின் பேரில் இரண்டு இளைஞர்களை கைதுசெய்து தடுத்து வைத்துள்ளனர்.