January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘கொழும்பில் 30 ஆயிரத்திற்கும் அதிகமான கொரோனா நோயாளர்கள்?’

மேல் மாகாணத்தில் கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலேயே கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்கள் அதிகமாக உள்ளதாகவும் இப்போது வரையில் 30 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கொழும்பில் கொரோனா தொற்று நோயாளர்களாக இருக்கலாம் என கருதுவதாக தேசிய தொற்று நோய் தடுப்பு பிரிவின் பிரதானி, வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

மேலும், இவர்களை முறையாக அடையாளம் காண இரண்டுவார கால அவகாசம் வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணம் தொடர்ந்தும் கொவிட் -19 வைரஸ் தொற்று அச்சுறுத்தல் உள்ள பகுதியாகவே கருதப்படுகின்றது. மேல் மாகாணத்தில் கொழும்பு மாநகரசபை எல்லைப்பகுதி மற்றும் அண்டிய பிரதேசங்களை அதியுச்ச அச்சுறுத்தல் பகுதியாக அடையாளம் கண்டுள்ளோம். இங்கு மக்கள் தொகை அதிகமாக இருக்கின்றமையே வைரஸ் தொற்று பரவ அதிக வாய்ப்பாக அமைந்துள்ளது.

கொழும்பை பொறுத்தவரை கொழும்பு 3,4,5,7 ஆகிய பகுதிகளில் மக்களின் தொகை குறைவாக உள்ளதனால் அங்கு மக்கள் கொரோனா வைரஸ் தொற்றில் சிக்கிக்கொள்ளவில்லை, எனினும் கொழும்பு 13,14,15 மற்றும் புறக்கோட்டை பகுதிகளில் மக்கள் நெரிசல் அதிகமாக உள்ளது. தொடர்மாடி குடியிருப்புகள், தோட்டப்புற வீடுகள் இருக்கின்ற காரணத்தினால் இங்கு வைரஸ் பரவல் அதிகமாக காணப்படுகின்றது.

ஆனால் உண்மையில் கொழும்பில் எத்தனை வைரஸ் தொற்றாளர்கள் உள்ளனர் என தெளிவாக எண்ணிக்கையொன்றை கூற முடியாதுள்ளது. இப்போது வரையில் 30 ஆயிரத்திற்கும் அண்மித்த கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்கள் இருப்பதாக கருதப்படுகின்றது.

ஆனால் இந்த தொகையை விட அதிகமாகவும் நோயாளர்கள் இருக்க முடியும் என்பதே எமது கணிப்பாகும். எவ்வாறு இருப்பினும் கொழும்பின் சகல பிரதேசங்களிலும் அதிகளவில் பி.சி.ஆர் பரிசோதனைகளை செய்வதன் மூலமாக மட்டுமே எண்ணிக்கைகளை கண்டறிய முடியும். எவ்வாறு இருப்பினும் அடுத்த இரண்டு வாரங்களில் கொழும்பில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையை கண்டறிய முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.