November 24, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அரசியல் தீர்வுக்காக ஒன்றுபட ‘தேசிய சபை’ அமைக்கும் பணி ஆரம்பம்; மாவை சேனாதிராஜா

தமிழ் மக்களின் அரசியல் தீர்வு மற்றும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பில் ஒன்றுபட்டு உழைப்பதற்காகவும், துறைசார் ஆலோசனைகள், நிபுணத்துவ உதவிகளை வினைத்திறன் மிக்கதாக பெற்றுக் கொள்வதற்காகவும் தேசிய சபை ஒன்றை அமைக்கும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்;

தமிழ் மக்களின் அரசியல் தீர்வு மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் ஒன்றுபட்டு செயற்படுவதற்காக இப்போது தமிழ்த் தேசியம் சார்ந்து செயற்படும் கட்சிகளை ஒன்றிணைத்துப் பயணிக்க ஆரம்பித்துள்ளோம்.

இது தொடர்பில் நான் விடுத்த கோரிக்கைக்கு அனைத்து தமிழ்த் தேசியம் சார்ந்த கட்சித் தலைவர்களும் தங்கள் முழுமையான ஆதரவை வழங்கியிருக்கின்றார்கள். காலத்தின் தேவை அறிந்து ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த கூட்டு முயற்சி எதிர்காலத்தில் மேலும் பலப்படுத்தப்படவுள்ளது.

அதாவது எதிர்காலத்தில் தமிழர் தீர்வு விடயத்திலும் ஏனைய விடயங்களிலும் ஒன்றாக சேர்ந்து செயற்படுவதற்காக தேசிய சபை ஒன்றை உருவாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கின்றோம்.

இந்தத் தேசிய சபையில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள், துறை சார் நிபுணர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள்,புலம்பெயர் பிரதிநிதிகள், முதலீட்டாளர்கள், அறிஞர்கள், பொருளாதார வல்லுநர்கள் மற்றும் ஜஸ்மின் சூகா, நவநீதம்பிள்ளை போன்ற வெளிநாட்டுப் பிரதிநிதிகள் ஆகியோரை உள்ளடக்குவதற்குத் தீர்மானித்திருக்கின்றோம்.

இதற்கான ஆரம்பகட்ட முயற்சிகள் இப்போது தொடங்கியிருக்கின்றன. விரைவில் தேசிய சபை ஒன்று உருவாக்கப்படும். இந்த முயற்சி மாவை சேனாதிராஜாவினால் முன்னெடுக்கப்படும் தேர்தலை இலக்காகக் கொண்ட நடவடிக்கை அல்ல. இது இன்றைய காலத்தின் கட்டாய தேவை என்று அவர் மேலும் தெரிவித்தார்.