இலங்கையில் வீடுகளில் உயிரிழப்போரின் உடல்களுக்கு பிரேத பரிசோதகர்களின் அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப பி.சீ.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
கொவிட்- 19 வைரஸ் பரவல் அவதானமுள்ள மற்றும் அவதானமற்ற அனைத்து பகுதிகளிலும் இந்த தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதேநேரம், இதற்கு முன்னர் வசிப்பிடங்களில் உயிரிழந்தவர்களின் உடல்கள் சுகாதார அதிகாரிகள் அல்லது கிராம சேவகர்களின் அறிவுறுத்தல்களுக்கு அமையவே பி.சீ.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வந்துள்ளன.
சிலபோது, வைத்தியசாலைகளில் பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் பி.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
சுகாதார அமைச்சின் புதிய தீர்மானத்துக்கு அமைய, உயிரிழந்தவர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்தனரா, இல்லையா என்பது உறுதியாகும் வரை இறுதிச் சடங்குகளுக்காக சடலங்கள் ஒப்படைக்கப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.