சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உயிருக்கும் கொரோனா வைரஸால் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கின்றது. எனவே, தமிழ் அரசியல் கைதிகளின் நிலைமையைக் கருத்தில்கொண்டு நிபந்தனையில்லாமல் அவர்களை விடுதலை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இங்கு அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்;
சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உயிருக்கும் கொரோனா வைரஸால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. தொற்றா நோய் காரணமாகவே பலருக்கு இந்தக் கொரோனாத் தொற்று பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது என ஜனாதிபதியும் கூறியிருக்கின்றார். அந்தவகையில் மிகவும் கொடிய சட்டமாகிய பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் பலர் இன்று நீரிழிவு நோய் உட்பட தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆகவே, தமிழ் அரசியல் கைதிகளின் நிலைமையைக் கருத்தில்கொண்டு நிபந்தனையற்று அவர்களை விடுதலை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது குறைந்த பட்சம் பிணையிலாவது அவர்களை விடுவிக்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.