January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வெளியேறியவர்களை கண்டறிய புலனாய்வாளர்கள் களத்தில் : இலங்கையின் இன்றைய நிலவரம்

மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறிய நபர்களை கண்டறிவதற்காக விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

பொலிஸ் புலனாய்வுப் பிரிவினாரால் இது தொடர்பான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறி மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறியுள்ள நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கொரோனா அச்சநிலைமை காரணமாக மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறுவதற்கு கடந்த 11 ஆம் திகதி நள்ளிரவு முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி நள்ளிரவு வரை தடைவிதிக்கப்பட்டுள்ளது.

குறித்த காலப்பகுதியில் மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறி வெளி மாகாணங்களுக்கு சென்றவர்கள் தற்போது தங்கியிருக்கும் இடங்களிலேயே சுய தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல் செயற்பாடுகள் நிறைவடைந்ததன் பின்னர் அவர்கள் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மேல்மாகாணத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் ட்ரோன் கெமராக்கள் மூலம் கண்காணிக்கும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அந்த நடவடிக்கையின் போது கொழும்பு மோதரை மற்றும் மட்டக்குளி ஆகிய பகுதிகளில் இருந்து 15 பேர் நேற்றைய தினத்தில்  கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பாக சட்ட நடவடிக்க முன்னெடுக்கப்படும் என்று பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஐ கடந்தது

கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தினால் இன்று மாலை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளது.

கொழும்பு 14 ஐ சேர்ந்த 83 வயது பெண்ணொருவரும், கொழும்பு 13 ஐ சேர்ந்த 78 மற்றும்  64 வயதுடைய ஆண்கள் இருவரும் வீடுகளில் உயிரிழந்துள்ளனர்.

இவர்களின் பிரேத பரிசோதனைகளின் போது இவர்களுக்கு கொரோனா தொற்று இருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் இரத்மலானை பிரதேசத்தை சேர்ந்த 69 வயதுடைய நபரொருவர் மாரடைப்பு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது உயிரிழந்துள்ளார். பின்னர் அவரின் பிரேத பரிசோதனையில் அவருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதேவேளை சிலாபம் பிரதேசத்தை சேர்ந்த 68 வயது நபரொருவர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பின்னர், வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த போது உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்துள்ள அனைவரும் குருதியமுக்கம், நீரிழிவு உள்ளிட்ட பல்வேறு நோய்களினால் பீடிக்கப்பட்டிருந்தவர்கள் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் 198 பேருக்கு தொற்று

கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 198 பேர் இன்றைய தினத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 15,921 ஆக அதிகரித்துள்ளது.

குணமடைந்தோர் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியது

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 378 பேர்குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு இன்று தெரிவித்துள்ளது.

24 வைத்தியசாலைகள் மற்றும் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சைப்பெற்றவர்களே இவ்வாறு வீடு திரும்பியுள்ளனர்.

இதனையடுத்து, நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 11,031 ஆக உயர்வடைந்துள்ளது.

சந்தேக நபர்களை கைது செய்த அதிகாரிகளுக்கு சிக்கல்

இனிதும பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட 16 பொலிஸார் வீடுகளில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த பொலிஸ் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்கள் பூசா சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் இருவருக்கும்  கொரோனா தொற்று இருப்பதாக பரிசோதனைகள் மூலம் தெரியவந்துள்ளது.

இதனால், அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இரண்டு வாரங்களில் அதிக மரணங்கள் பதிவு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை 48 பேர் மரணித்துள்ளனர்.

இந்த மரணங்களில் அதிகமானவை கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளன.

உயிரிழந்தவர்களின் பெரும்பாலானவர்கள் பல்வேறு நோயினால் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக தங்களது வீடுகளிலேயே உயிரிழந்துள்ளதாக கொவிட் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த இரண்டு வாரங்களில் அதிகளவான மரணங்கள் பதிவாகியுள்ளன.

வீட்டில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் மாரடைப்பினால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக உயிரிழந்ததாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

மருந்துகளை வீடுகளுக்கு கொண்டு சென்று வழங்க நடவடிக்கை

கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள தொடர் மாடி குடியிருப்புகளில் உள்ளவர்களுக்கு மருந்துகளை வீடுகளுக்கே கொண்டு சென்று வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சு இன்று பிற்பகல் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீண்ட கால நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்காகவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

காய்ச்சல், இருமல் அல்லது சுவாசிப்பதில் சிரமம் அகிய பிரச்சினைகள் இருந்தால் உடனடியாக 1999 என்ற தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொண்டு அது தொடர்பில் அறிவிக்குமாறு சுகாதார அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

இராணுவத்தளபதி விடுத்துள்ள விசேட அறிவிப்பு

பொது மக்களிடம் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மறைத்து செயற்பட வேண்டிய தேவை கிடையாது என இராணுவத்தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

“ஜனாதிபதி சுகாதார அமைச்சர் மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஆகியோரின் ஆலோசனைகளுக்கமைய கொரேனா தொற்றினை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றும் கூறியுள்ளார்.

172 கைதிகளுக்கு கொரோனா 

கொழும்பு சிறைச்சாலையின் தடுத்து வைக்கப்பட்டுள்ள 12 கைதிகளுக்கு இன்றைய தினத்தில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 172 ஆக உயர்வடைந்துள்ளது.