கொவிட் -19 தொற்றால் உயிரிழப்பவர்களின் இறுதிச் சடங்குகள் குறித்து, இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ஷவுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி ஹானா சிங்கர் கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மரணமடையும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய இடமளிக்காது, தகனம் செய்யப்படுவதற்கு முஸ்லிம் சமூகம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது.
இந்த விடயம் தொடர்பாக அரசாங்கம் தொடர்ந்தும் ஆராய்ந்து வருகின்றது.
இந்நிலையில், ஐநாவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதியால் இது தொடர்பாக மகிந்த ராஜபக்ஷவுக்கு நேற்று இரவு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த கடிதத்தில், ”தொற்று நோயால் மரணிப்பவர்களின் சடலங்களின் மூலமாக வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கு அந்த சடலங்கள் தகனம் செய்யப்பட வேண்டும் என்ற பொதுவான அனுமானம்,ஆதாரங்களால் உறுதிப்படுத்தப்படாதது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ”முஸ்லிம்களின் ஜனாஸாக்களை பாதுகாப்பான முறையில் கௌரவமாக புதைப்பதற்கு ஏற்புடைய வகையில் அரசாங்கம் தற்போதுள்ள கொள்கையை மீண்டும் பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும்” என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மற்றும் நீதியமைச்சர் அலி சப்ரி ஆகியோருக்கும் அந்தக் கடிதத்தின் பிரதிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.