July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜனாஸா எரிப்பு விவகாரத்தில் சரியான தீர்வை அரசு வழங்க வேண்டும்; ரவூப் ஹக்கீம்

கொரோனா வைரஸ் நோய்த்தொற்றால் வீடுகளில் இறந்தால் எந்தவித மத அனுஷ்டானமுமின்றி எரிக்க நேரிடும் என்று கூறி சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் மக்களைப் பீதி அடையச் செய்து வருகின்றார். கொரோனாவினால் உயிரிழப்போரின் சடலங்களை எரிப்பது தொடர்பில் முஸ்லிம் மக்களுக்கு பிரச்சினையுள்ளது. இது தொடர்பில் சாதகமான முடிவை வழங்க வேண்டும் என அரசிடம் தாழ்மையாகக் கோரிக்கை விடுத்து வருகின்றோம்என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று பிரதமரும் நிதி அமைச்சருமான மஹிந்த ராஜபக்சவால் சமர்ப்பிக்கப்பட்ட 2020 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூல விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாடாளுமன்ற வரலாற்றில் முதன்முறையாக ஒரே வருடத்தில் இரு இடைக்காலக் கணக்கு அறிக்கைகளையும் நிதி ஒதுக்கீட்டு சட்டமொன்றையும் சமர்ப்பிக்கின்றோம். இதன் சட்டபூர்வ தன்மை குறித்து விவாதித்துள்ளோம். மேன்முறையீட்டு நீதிமன்றத்திலும் ஆராயப்பட்டு நீதிபதிகள் காரணம் கூறாது வழக்கை இரத்துச் செய்தனர். இது சட்டவிரோதமான செயற்பாடு என்பதால் இதனை எதிர்க்கின்றோம். நாம் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளமாட்டோம். எந்த அரசும் இவ்வாறான தவறைச் செய்யக்கூடாது.

எதிர்க்கட்சியினர் சர்வதேச முதலீட்டாளர்களைச் சந்தித்து இங்கு முதலீடு செய்ய வேண்டாம் என்று கோரியதாக அரச தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது. அது முற்றிலும் தவறான குற்றச்சாட்டு. எதிரணியில் யாரும் அவ்வாறு செய்யவில்லை.

நாடு பாரிய கடன் பொறியில் சிக்கியுள்ளது. வெளிநாட்டுக் கடன்களைச் செலுத்த அடுத்தவருடத்தில் 6 பில்லியன் டொலர் தேவைப்படும். இதனை எவ்வாறு ஈட்ட முடியும்?

எமது அரசு செய்த சில நடவடிக்கைகளினால்தான் கையிருப்பில் இருந்து ஒரு பில்லியன் டொலர் செலுத்த முடிந்தது. கடன் முகாமைத்துவ சட்டத்தை 2018இல் நிறைவேற்றியதால் இது வாய்ப்பாக அமைந்தது. அரசு எதிர்காலத்தில் சர்வதேச தடைகளுக்கு முகங்கொடுக்க நேரிடும் என்றார்.