January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வடக்கில் இடம்பெறும் முறைகேடான நடவடிக்கைகளை அரசு நிறுத்தவேண்டும்; கஜேந்திரன் எம்.பி.

வடக்கு மாகாணத்தில் முறைகேடான செயற்பாடுகளை அரசு உடன் நிறுத்த வேண்டும். இல்லையேல் அதற்கான விபரீதங்களை சந்திக்க வேண்டி வரும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று பிரதமரும் நிதி அமைச்சருமான மஹிந்த ராஜபக்சவால் சமர்ப்பிக்கப்பட்ட 2020ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூல விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:-

“சட்ட ரீதியாக அனுமதிக்கப்பட்ட செலவீனங்களையும் தாண்டிய சட்டவிரோதமான செலவீனங்களுக்கும் சேர்த்து அங்கீகாரம் பெறுவதற்கு விவாதம் நடைபெறுகின்றது. இந்த விவாதத்தில் எமது மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றிச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

கடந்த மாதம் நானும், எமது கட்சியின் தலைவரும் திருகோணமலைக்குச் சென்று மக்களின் பிரச்சினைகள் பற்றிக் கலந்துரையாடியிருந்தோம். இந்தக் கலந்துரையாடல் பற்றி பொலிஸாரினால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எமது கட்சியின் முக்கியஸ்தர்கள் கந்தளாய் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து விசாரிக்கப்பட்டுள்ளனர். கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவரும் 32 கிலோமீற்றருக்கு அப்பால் உள்ள பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து அச்சுறுத்தப்பட்டுள்ளனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஜனநாயகத்துக்கு இது சிறந்த எடுத்துக்காட்டாகும்.

கடந்த தேர்தல் காலத்தின்போது பலருக்கு வேலைவாய்ப்புக்கள் வழங்கப்பட்டிருந்தன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்ந்தவர்கள் மற்றும் மொட்டுக் கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கும் இவ்வாறான வேலை வாய்ப்புக்கள் வழங்கப்பட்டன. வெளிநாடுகளில் படித்துவிட்டு வந்தவர்களுக்கும் வேலைவாய்ப்புக்கள் வழங்கப்பட்டன.

பருத்தித்துறையில் இவ்வாறு வேலைவாய்ப்பு வழங்கப்பட்ட ஒருவரின் பதவி கடந்த ஓகஸ்ட் மாதம் நிறுத்தப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் உள்ள பட்டியலில் அவரின் பேர் இருந்தது என்றும், பின்னர் வந்த பட்டியலில் அவரின் பெயர் இல்லை என்றும் கூறி அவர் இடைநிறுத்தப்பட்டுள்ளார். இதுபோன்று 600 இற்கும் அதிகமானவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.

வடபிராந்திய போக்குவரத்துத் திணைக்களத்தில் தகுதியற்றவர்கள் நியமிக்கப்படுகின்றனர். தேர்தல் காலத்தில் அரசுக்குச் சார்பாகப் பணியாற்றியவர்கள் பதவியில் இணைக்கப்படுகின்றனர்.

இரண்டு அரசுகளும் மாறி மாறி இவ்வாறு செய்கின்றன. இலங்கையில் மிகவும் புகழ்பெற்ற வட மாகாண போக்குவரத்துச் சபையானது சீரழிந்து வருகின்றது. ஏதாவது விபத்தொன்று இடம்பெற்றால் இதற்கான தீர்ப்புக்காக சம்பந்தப்பட்ட சாரதிகள் கொழும்புக்கு அனுப்பப்படுகின்றனர். ஏனைய மாகாணங்களில் அவ்வாறு இல்லை.

வடமாகாணத்தின் கல்வி நிலைமை மோசமாகியுள்ளது. கல்வி நிர்வாக சேவையின் வகுப்பு ஒன்றைச் சேர்த்த வட பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு சம்பள உயர்வு இதுவரை வழங்கப்படவில்லை.

பாடசாலைகளை தேசிய பாடசாலைகள் ஆக்குகின்றோம் என்ற போர்வையில் பாடசாலைகளை மத்திய அரசின் கீழ் கொண்டு செல்லும் நிலைமைகள் காணப்படுகின்றன. இது திட்டமிட்ட செயற்பாடாகக் காணப்படுகின்றது.

ஆசிரியர்கள் உள்ளிட்ட வசதிகள் எதனையும் வழங்காது பாடசாலைகள் தாமாகவே மத்திய அரசின் கீழ் செல்வதற்கான சூழல்கள் ஏற்படுத்தப்படுகின்றன.

இந்த மாதிரியான முறைகேடான செயற்பாடுகளை தமிழர் தாயகமான வடக்கில் அரசு நிறுத்த வேண்டும். போரால் அழிக்கப்பட்ட வடபகுதியில் எந்தவித அபிவிருத்திக்கும் 2020ஆம் ஆண்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இந்த நிலைமை தொடர்ந்தால் அரசு பாரிய தோல்வியையும் விபரீதங்களையும் சந்திக்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.