January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் கொரோனா: தீபாவளியால் வார இறுதியில் இறுக்கமடையும் கட்டுப்பாடுகள்

File Photo: Facebook/Desabandhu Thennakoon

இந்த வார இறுதியில் மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தக் கூடிய வகையில் விசேட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு கொவிட் தடுப்புப் பிரிவு திட்டமிட்டுள்ளது.

சனிக்கிழமை இந்துக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடவுள்ள நிலையில் அதனையொட்டி ஒன்று கூடல்கள் நடக்கலாம் என்பதனால் இந்த நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளது.

மேல் மாகாணத்தில் இருந்து வெளி மாகாணங்களுக்கு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், அதனுடன் இணைந்தாக மேல் மாகாணத்தில் இருந்து வெளியிடங்களுக்கும், வெளியிடங்களில் இருந்து மேல் மாகாணத்திற்குமான பஸ் போக்குவரத்துகள் நேற்று நள்ளிரவு முதல் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் எதிர்வரும் சனி, ஞாயிற்றுக்கிழமையில் நாடு பூராகவும் அனைத்து ரயில் சேவைகளையும் இரத்துச் செய்வதற்கு ரயில்வே திணைக்களம் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த இரு தினங்களும் விடுமுறை தினங்களாக அமைந்துள்ளமையை கருத்திற்கொண்டு, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் இன்று மாலை அறிவித்துள்ளது.

அத்துடன், எதிர்வரும் 16 ஆம் திகதி முதல், தற்போது சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அனைத்து அலுவலக ரயில் சேவைகள் மற்றும் பிராந்திய ரயில் சேவைகளும் வழமை போன்று சேவையில் ஈடுபடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 277 பேருக்கு கொரோனா

இன்றைய தினத்தில் இன்று மாலை 6 மணி வரையான காலப்பகுதியில் 277 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 15,627 ஆக உயர்வடைந்துள்ளது.

470 பேர் குணமடைந்தனர்

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்த 470 பேர் குணமடைந்து இன்றைய தினம் வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 10,653 ஆக அதிகரித்துள்ளது.

98 பேர் வெளிநாடுகளில் உயிரிழப்பு

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கையைச் சேர்ந்த 98 பேர் வெளிநாடுகளில் உயிரிழந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் தங்கியிருந்தவர்கள் எனகுறிப்பிடப்பட்டுள்ளது.

சவூதி அரேபியாவில் 35 பேரும், குவைத்தில் 21 பேரும், ஐக்கிய அரபு இராச்சியத்தில் 10 பேரும், கட்டாரில் 6 பேரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பிரித்தானியாவில் 5 பேரும், அமெரிக்கா, கனடா, ஆகிய நாடுகளில் 4 பேரும், பஹ்ரைன், ஜேர்மனி, ஜோர்தான், இத்தாலி ஆகிய நாடுகளில் தலா 2 பேர் வீதம் 8 பேரும், இஸ்ரேலில் ஒருவரும்  உயிரிழந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

51 பேர் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டனர்

மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து அரசாங்கத்தின் விசேட அனுமதியின் அடிப்படையில் 51 பேர் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

கட்டார் மற்றும் ஓமானில் இருந்து விசேட விமானங்கள் மூலம் இன்று அதிகாலை இவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த பின்னர் இவர்கள் அனைவரும் தனியார் வைத்தியசாலை ஒன்றின் மூலம் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து முப்படையினரால் நடத்தி செல்லப்படும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

‘ட்ரோன்’ ஊடான நடவடிக்கையில் சிக்கிய 15 பேர்

தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் சுகாதார ஒழுங்கு விதிகளை மீறி வெளியில் நடமாடுபவர்களை கண்டுபிடிக்கும் வகையில், இன்று மாலை முதல் அந்த பிரதேசங்களில் ட்ரோன் கமராக்கள் மூலம் கண்காணிக்கும் வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன்போது கொழும்பு முகத்துவாரம் பகுதியில் தனிமைப்படுத்தல் உத்தரவை மீறி நடமாடிய 15 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தனிமைப்படுத்தல் ஒழுங்கு விதிகளை மீறிய 158 பேர் கைது

தனிமைப்படுத்தல் ஒழுங்கு விதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் இதுவரை 158 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 12 நாட்களில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பொலிஸார் தனிமைப்படுத்தலில்

நாடளாவிய ரீதியில் 600 க்கும் மேற்பட்ட பொலிஸார் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பொலிஸார் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கடந்த ஏழு நாட்களில் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு வௌியே எந்தவொரு பொலிஸாரும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக அடையாளம் காணப்படவில்லை என பிரதிப் பொலிஸ் மா அதிபர் கூறியுள்ளார்.

பொரளை பொலிஸ் நிலையம் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையைச் சார்ந்தவர்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தடுப்பூசி குறித்து சுகாதார அமைச்சு ஆராய்வு

கொரோனா வைரஸ் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் முதல் கட்டமாக அதனை வழங்க வேண்டிய தரப்பினர் குறித்த ஆய்வுகள் சுகாதார அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

சுகாதார அமைச்சின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டின் மொத்த சனத்தொகையில் 20 வீதமானோருக்கு தடுப்பூசி வழங்க உலக சுகாதார ஸ்தாபனம் இணக்கம் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தடுப்பூசியை கொள்வனவு செய்வது குறித்த நடவடிக்கைகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் அதனை இந்த நாட்டு மக்கள் அனைவருக்கும் வழங்குவது அவசியமாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால் அது மிகப் பெரிய நடைமுறை எனவும் அதற்கு உரிய திட்டத்தை இந்த சந்தர்ப்பத்தில் ஆரம்பிக்காவிட்டால், நாடு அதற்கான வாய்ப்பை இழக்க நேரிடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மெனிங் சந்தை ஊழியர்களுக்கு விசேட கோரிக்கை

இதுவரை பிசிஆர் பரிசோதனைகளுக்கு உட்படாத மெனிங் சந்தை ஊழியர்களை உடன் தொடர்புகொள்ளுமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதன்படி, 0718 591 555, 0718 591 551 மற்றும் 0718 591 554 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.

இந்த நிலையில் புறக்கோட்டை மெனிங் சந்தையை எதிர்வரும் திங்கட்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை அளவில் திறப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மெனிங் சந்தையை பேலியகொடையில் அமைந்துள்ள அரச பொறியியல் கூட்டுத்தாபன கட்டடத்திற்கு மாற்ற நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதுடன், அங்கு சந்தை நடவடிக்கைகளை அடுத்த வாரத்தில் இருந்து ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இதன்போது மொத்த விற்பனை நடவடிக்கைகள் மாத்திரமே முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிசிஆர் சோதனை மேற்கொள்ளப்பட்ட கைதிகள் இடமாற்றம்

போகம்பறை பழைய சிறைச்சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கைதிகளுள், பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்ட 250 கைதிகள் கேகாலை மற்றும் நீர்கொழும்பு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்படவுள்ளனர்.

தற்போது குறித்த சிறையில் 810 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், அனைத்து கைதிகளுக்கும் விரைவாக பிசிஆர் பரிசோதனை செய்யபடவுள்ளனர் என்று சிறைச்சாலையின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தமது சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு தெரிவித்து, இன்றைய தினம் போகம்பறை பழைய சிறைச்சாலையின் கைதிகள் பலர் கூரை மீதேறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமையும் குறிப்பிடத்தக்கது.