தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் மக்களின் நடமாட்டத்தை கண்காணிப்பதற்கு நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக இன்று பிற்பகல் முதல் நவீன தொழிநுட்பத்துடன் கூடிய ட்ரோன் கமெராக்களை குறித்த பிரதேசங்களில் பறக்கவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரான பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
விமானப்படையினரின் ஒத்துழைப்புடன் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், இதன்போது தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுபவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் அதிலிருந்து விடுவிக்கப்படும் வரை இந்த கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் தமது வீடுகளில் இருக்காமல் வெளியில் நடமாடுவதாக கிடைக்கப்பெற்ற தகவல்களை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண கூறினார்.
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி நடமாடும் நபர்களை ட்ரோன் காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு விசேட பாதுகாப்பு படையினரை அனுப்பி கைதுசெய்யவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.